யூரோ டூர் 37: நோர்டிக் நாடுகள் – நார்வே என்னும் செல்வச் சமுத்திரம்; ஸ்வீடனின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்!

ஐரோப்பா பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத ஒன்று ஸ்காண்டிநேவிய நாடுகள். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் Faroe தீவுகள், கிரீன்லாந்து மற்றும் Åland ஆகிய தீவுகளை உள்ளடக்கி, 27 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நோர்டிக் பிராந்தியமானது USD 1.5 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஐரோப்பாவில் 5வது பெரிய பொருளாதாரமாகவும், உலகின் 10வது பெரிய பொருளாதாரமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கும் நோர்டிக் நாடுகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை ஸ்காண்டிநேவிய வேர்களைக் கொண்ட நோர்டிக் நாடுகள். ஆனால் டென்மார்க், நார்வே, ஃபின்லேண்ட் மற்றும் ஸ்வீடன் ஆகிய நான்கு நாடுகள்தான் ஸ்காண்டிநேவிய நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

அப்படியென்ன இந்த நோர்டிக் நாடுகள் ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்காக சில புள்ளி விவரங்கள் இதோ…

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் 2000 பெரிய நிறுவனங்களில் சுமார் 60 நிறுவனங்கள் நோர்டிக் நாடுகளைச் சேர்ந்தவைதான். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் சராசரியைவிட சுமார் 40% அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட நோர்டிக் பிராந்தியத்தின் சராசரி உற்பத்தித் திறன் ஐக்கிய இராஜ்ஜியத்தை விட 27%-மும், ஜெர்மனியை விட 33%-மும் அதிகமானது. நோர்டிக் பிராந்தியத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏனைய அனைத்து நாடுகளின் சராசரியை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. உலகின் முதல் 30 பணக்கார நாடுகளின் பட்டியலில் அனைத்து நோர்டிக் நாடுகளும் உள்ளன, அதேபோல உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலிலும் அனைத்து நோர்டிக் நாடுகளும் அடங்குகின்றன. நிலையான பொருளாதாரத்தைக் கொண்ட நோர்டிக் நாடுகளில் தொழிலாளர்களுக்கான சம்பளமும் ஏனைய மேற்குலக நாடுகளைவிடக் கணிசமாக வழங்கப்படுகிறது. அதேபோல உலகில் அதிகளவு வரி அறவிடப்படுவதும் இந்த நாடுகளில்தான்.

ஸ்காண்டிநேவிய நாடுகள்

இந்த ஐந்து நோர்டிக் நாடுகளும் வெவ்வேறு மொழிகள் மற்றும் வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்டிருந்தாலும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நுகர்வோர் விருப்பத்தேர்வுகள் இங்கு ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியானவை. குறிப்பாக புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதில் ஏனைய ஐரோப்பியரை விட முன்னணியில் இருக்கின்றனர்.

கிரேட்டா தன்பெர்க் போன்ற உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொண்ட நோர்டிக் நாடுகளில் உள்ள மக்களும், அரசியல்வாதிகளும் சூழலியல் பிரச்னைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். 2000-ம் ஆண்டு முதல், நோர்டிக் பொருளாதாரங்கள் 28% வளர்ந்தும் CO2 உமிழ்வுகள் 18% குறைந்தும் உள்ளது இதற்கான நல்ல சான்று.

உலகின் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடு, உலகின் மிக மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடு, மக்கள் வசிப்பதற்கான உலகின் சிறந்த நாடு, உலகின் மிகவும் தூய்மையான நாடு, உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு என இருக்கும் அனைத்து பரிசுகளையும் அள்ளிச்செல்லும் நோர்டிக் நாடுகள் இவ்வாரம் முதல் யூரோ டூரில்…

நார்வே

UN-இன் மனித மேம்பாட்டு அறிக்கையில் 16 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் முதலிடத்தைப் பெற்றுவரும் ஸ்காண்டிநேவியாவின் முக்கியமான நாடு. தனித்துவமான fjords-களுக்கும் (நுழைகழி), சலசலக்கும் ஏரிகளுக்கும், நார்தன் லைட்ஸால் (Northern Lights) வர்ண ஜாலம் காட்டும் மந்திர வானங்களுக்கும், நள்ளிரவு சூரியனுக்கும் பிரபலமான, பூமியின் பகட்டான சொர்க்கம் நார்வே.

Northern Lights

19-ம் நூற்றாண்டில், நார்வே இன்று உள்ள அளவு செல்வங்களில் புரளவில்லை. மக்கள்தொகையில் பெரும்பாலோர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களில் குறைந்த ஊதியத்திற்குத்தான் வேலை செய்தனர், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுமார் 800,000 நார்வேஜியர்கள் ஏனைய ஐரோப்பியரைப் போலவே, பிழைப்புத் தேடி அமெரிக்கா நோக்கிக் குடிபெயர்ந்தனர். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாட்டின் நிதி நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. நார்வே அரசாங்கம் உருவாக்கிய நீர்மின்சாரத் தொழில் பல லட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தியது. இரண்டாம் உலகப் போரால் முடங்கிய நார்வே பொருளாதாரம் அமெரிக்காவிடமிருந்து கிடைத்த நிதியுதவியால் விரைவாக மீண்டு, 1960களில் செழிப்பாக வளர ஆரம்பித்தது.

1969-களில் அதிர்ஷ்டக்காற்று நார்வே கடலில் பலமாக அடிக்கத்தொடங்கியது. 1969-ம் ஆண்டில், வட கடலில் கண்டுபிடிக்கப்பட்ட கணிசமான எண்ணெய் இருப்பு நார்வேயின் தலையெழுத்தையே மாற்றி எழுதியது. அன்று தொடங்கிய நார்வேயின் சுக்கிர திசை, இன்றுவரை வெற்றிகரமாகத் தொடர்கிறது.

15 ஜூன் 1971-இல் Ekofisk கண்டுபிடிப்புடன், நோர்வேயின் எண்ணெய் சாம்ராஜ்ஜியம் ஆரம்பமானது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் கொண்டுவரப்பட்டன. எண்ணெய் உற்பத்தியை நார்வே தொடங்கிய நேரம் பார்த்து உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததால், நார்வேயின் ஜிடிபியும் அதிகரித்தது. எண்ணெய் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானம், நார்வேயைப் பணத்தில் புரள வைத்தது. உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்றாக நார்வே மாறியது. தற்போது நார்வேயின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $65,800 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது உலகிலேயே மிக உயர்ந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். 2020-இல் இதன் ஜிடிபி 362 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நார்வே | Norway

உலகின் மிகக் குறைந்த வருவாய் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாடுகளில் ஒன்றான நார்வே அதன் குடிமக்களுக்குக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை எல்லோருக்கும் சமமாகக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவினை நடத்தும் பெருமை வாய்ந்த இடமாக நார்வே தலைநகர் ஒஸ்லோ இருந்து வருகிறது. இங்கு அனைத்து குடியிருப்பாளர்களின் வருமானம் மற்றும் செல்வக் கணக்கும், அரசு வசமான பொது பதிவில் உள்ளது, எனவே எவரும் அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வது பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. அதுவே நார்வேயை உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட ஆரோக்கியமான சமூகம் வாழும் இடமாக மாற்றியுள்ளது. நார்வேயைச் சுற்றியுள்ள கடலில் காணப்படும் எண்ணெய்யும் எரிவாயுவும் நார்வேயைச் செல்வத்தில் குளிப்பாட்டிக்கொண்டே இருக்கிறது.

அள்ள அள்ளக் குறையாத ஐரோப்பாவின் பணம் கொழிக்கும் செல்வச் சமுத்திரம் நார்வே!

ஸ்வீடன்

நோர்டிக் பிராந்தியத்தில் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகையைக் கொண்டதுமான ஸ்வீடன், 537.6 billion USD-உடன் 47.2 பில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட்டுக்குச் சென்ற வருடம் வழங்கியுள்ளது.

வட ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கொள்ளையடிப்பதற்காக 9-ம் நூற்றாண்டில் தோன்றிய வைக்கிங்ஸ் மூலம் ஸ்வீடன் உலகம் முழுவதும் அறியப்பட்டது. 17-ம் நூற்றாண்டில் அதிகாரத்தின் உச்சத்தை எட்டிய ஸ்வீடன் இராஜ்ஜியம், டென்மார்க், ரஷ்யா, பின்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனியின் பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. இருப்பினும், ரஷ்யா, போலந்து மற்றும் டென்மார்க் ஆகியவை 1700-ல் ஸ்வீடனுக்கு எதிராக ஒன்றிணைந்து பெரும் போரில் ஈடுபட்டன.

Stockholm, Sweden

தொடக்கத்தில் ஸ்வீடன் சிறப்பாகப் போராடிய போதிலும், இளம் ஸ்வீடிஷ் மன்னர் கார்ல் XII, ரஷ்யாவின் மாஸ்கோவைத் தாக்க எடுத்த முடிவு, இறுதியில் அப்போரில் ஸ்வீடனின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. அதுவரை ஒரு பெரிய ஐரோப்பியச் சக்தியாக இருந்த ஸ்வீடன் அப்போரின் முடிவில் அதளபாதாளத்தில் வீழ்ந்தது. 1809-ல் நடந்த நெப்போலியன் போர்களுக்குப் பிறகு, ஸ்வீடன் பின்லாந்தை ரஷ்யாவிடம் இழந்தாலும் நார்வேயைத் தன்வசப்படுத்திக்கொண்டது. 1905-ல் தொழிற்சங்கம் கலைக்கப்பட்டு நார்வே ஒரு சுதந்திர நாடாகும் வரை, நார்வே ஸ்வீடனின் ஒரு பகுதியாகவே இருந்தது.

மோட்டார் வாகனங்கள், தொலைத்தொடர்பு, மருந்துகள், தொழில்துறை இயந்திரங்கள், துல்லியமான உபகரணங்கள், ரசாயனப் பொருள்கள், வீட்டுப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள், இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றை முக்கிய பொருளாதார ஏற்றுமதியாகக் கொண்ட ஸ்வீடன், உலகப் பிரசித்திபெற்ற வோல்வோ கார்களுக்கும் IKEA தளவாடங்களுக்கும் தாய் வீடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%-ஐ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குச் செலவிடும் ஸ்வீடனில், மனித சமூகத்தை மேம்படுத்த உதவும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 1968-ம் ஆண்டில், ஆல்ஃபிரட் நோபலின் நினைவாகப் பொருளாதார அறிவியலுக்கான பரிசை நிறுவுவதற்கு நிதியளித்து நோபல் பரிசை ஆரம்பித்து வைத்த பெருமையும் ஸ்வீடனின் மத்திய வங்கிக்கே (Sveriges Riksbank) சேரும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள ஸ்வீடன் நேட்டோவில் உறுப்பினராக இல்லை. ஆனாலும் தற்போது உக்ரைனுக்கு ஸ்வீடன்தான் அதிகளவான ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ஸ்வீடன் போருக்கு அனுப்பக்கூடிய விமானங்களின் எண்ணிக்கையை, ரஷ்யாவைப் போலவே ரகசியமாக வைத்துள்ளது. என்றாலும் தோராயமாக 1,000 முதல் 1,200 வரை இருக்கும் என்பது யூகம், இதனால் ஸ்வீடிஷ் விமானப்படை உலகின் சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இயற்கையாகவே மிகவும் அழகு வாய்ந்த ஸ்வீடனின் மூன்றில் இரண்டு நிலப்பரப்பு காடால் சூழப்பட்டுள்ளது. வடதுருவத்துக்கு மிக அருகில் இருக்கும் நாடுகளில் ஒன்றான ஸ்வீடனின் இருப்பிடம் காரணமாக, ஸ்வீடனில் பயிர்கள் வளரும் பருவம் ஒப்பீட்டளவில் குறுகியதாக உள்ளது. எனவே ஸ்வீடன் இறக்குமதியைப் பெருமளவில் நம்பியுள்ளது. ஆனாலும் தானியங்கள், பார்லி, ஓட்ஸ் மற்றும் கோதுமை போன்ற உற்பத்தியில் ஸ்வீடிஷ் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

ஸ்வீடன் சந்தை

சமீப காலமாக அதிகரித்து வரும் ஸ்வீடிஷ் சுற்றுலாத் துறை, வெயில் காலங்களில் அதிக சுற்றுலாப் பயணிகளை எதிர்கொள்கிறது. மக்கள் ஸ்வீடிஷ் மொழியைப் பேசினாலும், ஸ்வீடனில் நீங்கள் வீதியில் போகும் யாரை நிறுத்திப் பேசினாலும், அவர்கள் மிகச் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள். எழுத்தறிவு விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ஸ்வீடிஷ் கல்வித்திட்டம் மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கிறது.

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் தொடர்ந்து இடம்பிடிக்கும் ஸ்வீடனின் பாஸ்போர்ட் உலகின் முதலாவது சக்திவாய்ந்த பவர்ஃபுல் பாஸ்போர்ட் என்ற கௌரவத்தையும் பெறுகிறது.

ஸ்காண்டிநேவியாவின் பெருமை மிகுந்த பிரமாண்டம் ஸ்வீடன்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடம்பிடித்த டென்மார்க் மற்றும் உலகின் மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த பின்லாந்து ஆகிய ஏனைய ஸ்காண்டிநேவிய நாடுகள் அடுத்த வார யூரோ டூரில்…

யூரோ டூர் போலாமா?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.