”நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள்” – திருசெங்கோட்டில் விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார சிறிய விசைத்தறியாளர்கள் சங்கத்தின் சார்பில், விசைத்தறியாளர்கள் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், பருத்தி, பஞ்சு நூல் ஏற்றுமதி செய்ய கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்செங்கோடு வட்டார சிறிய விசைத்தறியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத்தை சேர்ந்த 13 விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கோஷமிட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் இளவரசியிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க நிர்வாகிகள் கொடுத்தனர்.
image
தற்போது உயர்ந்துள்ள நூல் விலையால் விசைத்தறி தொழில் நலிவடைந்து போய் உள்ளது. எனவே நூல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் பருத்தி, பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.