வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம்| Dinamalar

பெங்களூரு : ”பெங்களூரில் 100 ஆண்டுகளுக்கு பின் பெரும் மழை பெய்ததால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் முட்டாள் அல்ல. மழை பிரச்னைக்கும், மாநகராட்சி தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 100க்கு 100 சதவீதம், நாங்களே வெற்றி பெறுவோம்,” என வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா நம்பிக்கை தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று அவர் கூறியதாவது:பெங்களூரில் பெய்த மழையினால் ஏற்பட்ட பிரச்னைக்கும், மாநகராட்சி தேர்தலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.

இயற்கை சீற்றங்களை, மழையுடன் ஒப்பிடுவது சரியல்ல. நான் 40 ஆண்டுகளாக, பெங்களூரின் பிரதிநிதியாக இருக்கிறேன். நகர பொறுப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன்.தவறுகளை நாங்கள் சரி செய்து கொள்வோம். நாங்கள் உறங்கவில்லை. இதை மக்களும் உணர்ந்துள்ளனர். அடிப்படை வசதிகளுடன், அமைதி, நிம்மதியை மக்கள் விரும்புகின்றனர். எனவே மாநகராட்சி தேர்தலில், நாங்கள் வெற்றி பெறுவது எளிது.உச்ச நீதிமன்றம் எட்டு வாரத்தில், தேர்தல் செயல்பாடுகளை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இதன்படி முதல்வர் நடவடிக்கை எடுப்பார். உரிய காலத்தில், தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.யாருடைய ஆட்சியில், என்னென்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரியும். 100 ஆண்டுகள் இல்லாத அளவில், பெரும் மழை பெய்ததே பிரச்னைகளுக்கு காரணம். இது மக்களுக்கும் தெரியும். 100க்கு 100 சதவீதம் எங்கள் வெற்றி உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.