தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. உறுதி

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டியை 2022 மே 23ஆந் திகதி சந்தித்தார்.

எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களை அரசாங்கம் முன்னறிவித்துள்ளதாகவும், பாதிப்புக்களைக் குறைக்கும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் உட்பட, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கினார்.

மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. மற்றும் நன்கொடை நாடுகளின் பங்களிப்புடன் கூடிய மத்திய பொறிமுறையொன்று பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். இருதரப்பு பங்காளிகளுடன் கலந்தாலோசித்து, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விவசாயத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான கவலைகளுக்குமான ஐ.நா.வின் முழுமையான ஆதரவை ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸுக்கு உறுதியளித்தார். இது தொடர்பில் ஐ.நா. பலதரப்பு முறையீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸுக்கு வழக்கமான ஈடுபாடுகள் மற்றும் விளக்கங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்துடன் ஐ.நா. தனது ஒத்துழைப்பைத் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மே 24

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.