தேர்வுக்கு முதல் நாள் பிரியாணி விருந்து: மாணவர்களை அசத்திய பட்டுக்கோட்டை ஆசிரியர்

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அடுத்துள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அம்மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ‘முட்டை பிரியாணி’ விருந்து அளித்து அசத்தியுள்ளார் அப்பள்ளியின் கணித ஆசிரியர்.

10-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று அவனது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவ, மாணவியர் அனைவருக்கும் முட்டை பிரியாணி விருந்து அளித்துள்ளார் அக்கணித ஆசிரியர்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எல்.நாடிமுத்து (54). கணிதத்தில் முனைவர் ( Ph.D) பட்டம் பெற்றுள்ள நாடிமுத்து பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள நாட்டுச்சாலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் ஆத்திக்கோட்டை, தளிக்கோட்டை, படப்பைக்காடு, வெண்டாக்கோட்டை, பாப்பாவெளி, பாளையக்கோட்டை, நாட்டுச்சாலை ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களின் பெற்றோர் பெரும்பாலும் கல்வியறிவு இல்லாத விவசாய கூலித் தொழிலாளிகள்.

இப்பள்ளி 1986-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு கடந்த 1997-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் மொத்த எண்ணிக்கை 475. பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 28. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 64. அவர்களில் மாணவிகள் 24 பேர்.

இன்று 10-ம் வகுப்புக்கான கணிதத் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அம்மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவருக்கும் நேற்று (மே 23) பிற்பகல் மதிய உணவாக தனது சொந்த செலவில் ‘முட்டை பிரியாணி’ விருந்து அளித்து அசத்தியுள்ளார் கணித ஆசிரியர் நாடிமுத்து.

மாணவ, மாணவியர்க்கு ‘முட்டை பிரியாணி’ வழங்கும் ஐடியா எப்படி உதயமானது?

“நான் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித தேர்வுக்கான நாளுக்கு முன்பு பிற பாடத் தேர்வுகளுக்கான இடைப்பட்ட விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறேன். அச்சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிரை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் எனது சொந்த செலவில் டீ, பிஸ்கட் வழங்குவேன். இதை கடந்த 17 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு மே 6-ம் தேதி தொடங்கியது. அன்று தமிழ் பாடத்திற்கான தேர்வு. அதற்கடுத்து மே 18-ம் தேதி ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இன்று மே 24-ம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றுள்ளது. இப்படி ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடையே அதிக இடைவெளி கொடுத்து தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் சில தினங்களுக்கு முன் என்னிடம் ‘ஸார், எனக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்த ஆண்டு எங்களுக்கு உங்க செலவுல பிரியாணி வாங்கி கொடுங்க, ஸார்,’ என கோரிக்கை விடுத்தார். எனவே, அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவ, மாணவியர் அனைவருக்கும் கணித தேர்வுக்கு முதல் நாளான நேற்று (மே-23) மதிய உணவாக ‘முட்டை பிரியாணி’ விருந்து அளித்தேன்,” என்கிறார் ஆசிரியர் நாடிமுத்து.

“அம்மாணவனின் ஆசையை நிறைவேற்றியதில் எனக்கு மனசுக்கு ரொம்ப திருப்தியாக உள்ளது. அதைவிட இன்னொரு விஷயம், ‘எனது வாழ்க்கையில் இப்போதுதான் முதன் முதலாக பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன்’ என மற்றொரு மாணவர் கூறினார். அதைக்கேட்டு நான் நெகிழ்ந்து போய்விட்டேன்” என்கிறார் ஆசிரியர் நாடிமுத்து.

அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கின்போது கடந்த ஜுன் முதல் செப்டம்பர் வரை தொடர்ந்து நான்கு மாதங்கள் ஆத்திக்கோட்டை உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கும் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று அக்கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களை ஆங்காங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வரவழைத்து அங்குள்ள வகுப்பறையில் கணித பாடம் நடத்தியுள்ளார் ஆசிரியர் நாடிமுத்து.

மற்ற பாடங்களுக்கான கேள்வி பதில்களை மாணவர்கள் மனனம் செய்து தேர்வில் எழுதி பாஸாக முடியும். ஆனால், கணிதப் பாடம் அப்படியல்ல. மற்ற பாடங்களைப் போல மனனம் செய்து தேர்வில் எழுத முடியாது. கணிதச் சூத்திரங்களைப் புரிந்து கொண்டு தொடர்ந்து முறையாக பயிற்சி செய்தால்தான் மாணவர்களால் சரியாக விடையளிக்க முடியும் என்கிறார் நாடிமுத்து.

கணித ஆசிரியர் நாடிமுத்து எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆண்டுதோறும் 95 சதவீதத்துக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று வந்துள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு முதல் இதுவரை 10 தடவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக, இதுவரை இப் பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்கள் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.