ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை

தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும் என பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஆதாரம் இல்லாததால்  ஜூனியர் விகடன் இயக்குனர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ‘ஜி ஸ்கொயர்’ என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அந்த நிறுவன அலுவலர் புருஷோத்தம் குமார் என்பவர் கடந்த 21.05.2022 அன்று சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், கெவின் என்பவர், ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் குறித்தும், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா என்ற ராமஜெயம் குறித்தும் ஜூனியர் விகடன் இதழில் அவதூறு செய்தி வெளியிடப்படும் என்றும், சமூக ஊடகவியலாளர்கள் சிலர் மூலம் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பி விடுவோம் என்றும் மிரட்டி, பணம் கேட்பதாகத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  மிரட்டலில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் கெவின் என்பவரை கடந்த 22.05.2022 அன்று கைது செய்யப்பட்டார். இவர் 2ஜி வழக்கில் தொடர்புடைய கூறப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

image
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கையின் மூலம்  தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “கைதான கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.  அதேபோன்று, அந்த பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதற்கும்  புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எனினும், இந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.  அதன்படி இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: “பேரறிவாளனை விடுவித்த அரசு, என் தந்தை வாழ்வை சிறையிலேயே முடித்துவிட்டது“- மாதையன் மகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.