சென்னையில் சொத்துவரி உயர்வுக்கு அனுமதி- மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை:

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர்.

பின்னர் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. முக்கியமாக சென்னையில் சொத்துவரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பழைய மாநகராட்சி பகுதிகளுக்கு அதிகமாகவும், புதிதாக இணைந்த பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 600 சதுர அடி வரை 50 சதவீதமும், புதிதாக இணைந்த பகுதிகளுக்கு 25 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

601 சதுரஅடி முதல் 1200 சதுர அடி வரை பழைய மாநகராட்சி பகுதியில் 1201 சதுரஅடி முதல் 1800 சதுர அடி வரை 100 சதவீதமும், புதிதாக இணைந்த 75 சதவீதமும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 50 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. பழைய மாநகராட்சி பகுதியில் 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

1801 சதுர அடிக்கு மேல் பழைய மாநகராட்சி பகுதியில் 150 சதவீதமும் புதிய பகுதிகளுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி, ஆஸ்பத்திரிகள், தியேட்டர்களுக்கு கட்டிடத்தின் பரப்பளவுக்கு ஏற்பவும் அந்த தெருவின் அடிப்படை கட்டணத்தின் அடிப்படையிலும் சொத்துவரி நிர்ணயிக்கப்படும். காலி மனைகளுக்கு சதுர அடிக்கு ரூ.1 வீதம் உயர்த்தப்படும். இந்த வரி உயர்வு கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி மண்டப வளாகத்தில் முன்னாள் சென்னை மாகாண முதல்-அமைச்சர் சுப்பராயனுக்கு சிலை வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

935 இடங்களில் பஸ் பயணிகள் நிழற்குடை துருபிடிக்காத இரும்பு இருக்கைகள் மூலம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மழைநீர் ஓடைகளை சீர் செய்யப்படும், இல்லாத இடங்களில் புதிதாக வடிகால்வாய் அமைக்கப்படும்.

மாணவிகள் பாதுகாப்புக்காக மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இதற்காக ரூ.5.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.திரவியம் பேசும்போது, ‘காமராஜர் பிறந்த நாளில் மாநகராட்சி பள்ளிகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் படம் வைக்கப்பட்டு இருப்பது போல் மாநகராட்சியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை மாட்ட வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. பேசும்போது, ‘மாதவரம்-வடபெரும்பாக்கம் சந்திப்பு, கொசப்பூர் சந்திப்பு ஆகிய 2 இடங்களிலும் மேம்பாலங்கள் கட்ட வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.