திருச்சி செல்வேந்திரன் உடல்நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு…

திருச்சி: திருச்சியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்த துடன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மூத்த திமுக பிரமுகர் திருச்சி செல்வேந்திரனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில்  இன்றுகாலை தனிவிமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரியில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். சம்பா, குறுவை சாகுபடிக்கு,  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் 2நாள் சுற்றுப்பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 11.45மணி அளவில் திருச்சி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே என்.நேரு மற்றும் அதிகாரிகள் சென்றனர். விமான நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து, திருச்சி உறையூர், குழுமணி சாலையில் அமைந்துள்ள திமுக முன்னாள் பிரமுகர் திருச்சி செல்வேந்திரன் இல்லத்துக்கு சென்றார். முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நலம் குறித்து முதல்வர் விசாரித்தார். முதல்வருடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மற்றும் கே.என்.நேரு,  திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுற்றுலா மாளிகை திரும்பிய முதல்வர் வழியில், திருச்சி மாநகராட்சியை பார்த்ததும் அங்கு செல்லுமாறு கூறினார். திருச்சி மாநகராட்சி சென்றவர், அங்கு மேயர் இருக்கையில் அமர்ந்த முதல்வர் மாநகராட்சி அலுவலர்களிடம் சிறிது நேரம் நிலவரங்களை கேட்டறிந்து பின்னர் சுற்றுலா மாளிகை புறப்பட்டார். அப்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்களிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது முதல்வருடன்  நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர்  உடன் இருந்தனர்.

மீண்டும் சுற்றுலா மாளிகை வந்த முதல்வர், மதிய உணவுக்குப் பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்றார்.  அங்கு,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.