உயிரோடு இருப்போமா? திருச்சி முகாமில் கதறும் ஈழத் தமிழர்கள்

Sri lanka Tamil refugees hunger strike for release request in Trichy: திருச்சி சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை அகதிகள் தங்களை விடுவிக்கக் கோரி துாக்கமாத்திரை சாப்பிட்டும், தங்களை கத்தியால் அறுத்துக்கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சில மாத இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 14 நாட்களாக தொடங்கியிருக்கின்றனர். பலர் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருப்பதாகவும், தங்களை உடனடியாக விடுதலைச் செய்து, தங்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வலியுறுத்தியும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 20-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி இன்றோடு 14 நாட்களை கடந்துள்ளனர். தங்களை விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஓயாது எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு உடல் சோர்வும், மயக்கமும் ஏற்பட அவர்களை திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சையினை சிறைத்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கை அகதிகள் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது குறித்த விபரம் பின்வருமாறு; நாங்கள் தண்டனைக்காலங்களை கடந்து விட்டோம், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிந்து விடுவிப்பதில் காலம் கடத்துகின்றது சிறைத்துறை.

நாங்க இன்றோடு 14-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் பலரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருக்கின்றது. தமிழ் உறவுகளே எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஓர் உயிர் போனால் திரும்பப் பெற முடியாது. தயவு செய்து முதல்வர் இதற்கு உரிய தீர்ப்பினை வழங்கி எங்களின் உயிரினை காத்திடுங்கள்.

இன்று 8 பேரின் உடல் நிலை மிகவும் மோசமாகியிருக்கின்றது. முறையான சிகிச்சையளிக்க மருத்துவர்களும் சிறை அகதிகள் முகாமுக்கு வரவில்லை, சிறையின் பிரதான வாசலுக்கு நாங்கள் இப்போது வந்து காத்திருக்கோம்.

எங்கள் உறவுகளை இழந்து போவோமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இன்றோடு 14 நாட்களாகிவிட்டபடியால் யார் யார் உசுரோடு இருப்போம் என்று தெரியல என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும்.

இதையும் படியுங்கள்: 5 கிலோ நகை கொள்ளை வழக்கு: திணறும் தஞ்சை போலீஸ்; சி.சி.டிவி காட்சிகளை வெளியிட தயக்கம் ஏன்?

சிறப்பு முகாம் என்பது முகாம் அல்ல…அது சிறையை விட கொடுமையானது; மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடம் ஆகும். கடந்த காலங்களில் பல முறை அவர்கள் போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இன்று வரை விடுதலை செய்யவில்லை.

தமிழகத்தில் ஈழத்தமிழர் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.