“உ.பி. வளர்ச்சிப் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது” – பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ரூ.80,000 கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் முக்கிய தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “உத்தரப்பிரதேச இளைஞர்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு நன்றி. காசியின் பிரதிநிதியாக, காசிக்கு செல்லும்படி உங்களை நான் வலியுறுத்துவேன். புராதன மதிப்புகளுடன், காசி புதிய பொலிவுடன் வெளிப்படும் என்பது, உத்தரப்பிரதேச இளைஞர்களின் திறன்களுக்கு ஒரு உயிருள்ள உதாரணம்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி மீது மேலும் நம்பிக்கையை உருவாக்கும். இன்று உலகம் எதிர்பார்க்கும் நம்பகத்தன்மையும், நட்பு நாடுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சக்தியும், ஜனநாயக இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது. இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனை உற்று நோக்குகிறது, அதை பாராட்டுகிறது.

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. உலக சில்லறை வர்த்தகக் குறியீட்டில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. உலகில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் 3-வது பெரிய நாடு இந்தியா. உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 417 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக, அதாவது,ரூ.30 லட்சம் கோடி மதிப்புடைய சரக்குகளை ஏற்றுமதி செய்து, இந்தியா புதிய சாதனைப் படைத்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். கொள்கை, ஸ்திரத்தன்மை, ஒத்துழைப்பு, எளிதாக வணிகம் செய்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். எங்களின் சீர்திருத்தங்கள் மூலம், இந்தியாவை ஒரே நாடாக வலுப்படுத்த நாங்கள் உழைத்துள்ளோம். ஒரே நாடு – ஒரே வரியான ஜி.எஸ்.டி, ஒரே நாடு – ஒரே மின் தொகுப்பு, ஒரே நாடு – ஒரே பயண அட்டை, ஒரே நாடு – ஒரே குடும்ப அட்டை ஆகிய முயற்சிகள் எங்களின் தெளிவான, உறுதியான கொள்கைகளின் பிரதிபலிப்புகள்.

2017-ம் ஆண்டுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் வேகமான வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் உற்பத்தி துறைகளில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை என்ஜின் போன்று செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு நிலைமை மேம்படுத்தப்பட்டிருப்பது, வணிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்கி இருப்தோடு, மாநிலத்தின் நிர்வாக அமைப்புகளையும் மீட்டெடுத்துள்ளது. ஒரு மாநிலத்தின் எம்.பி.யாக, மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தில் உள்ள திறமை மற்றும் திறனை அவர்களிடமிருந்து நாடு எதிர்பார்க்கும்.

நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு அல்லது ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உத்தரப்பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அண்மையில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், கங்கையின் இருகரைகளிலும், 5 கிமீ தூரத்துக்கு ரசாயன கலப்பு இல்லாத விவசாய பெருவழித்தடம் அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் 25 முதல் 30 மாவட்டங்களை உள்ளடக்கிய, 1,100 கி.மீ., தூரத்துக்கு ஓடும் கங்கை நதியின் மூலம் இயற்கை விவசாயத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். பெருமுதலாளிகளுக்கு தற்போது விவசாயத்துறையில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்புகள் உள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் மூலதன செலவினங்களுக்காக ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

நவீன முறையிலான மின்தொகுப்பு, எரிவாயு குழாய் இணைப்புகள், பல்வகை போக்குவரத்து வசதி, விரைவு நெடுஞ்சாலைகள், நவீன மயமாக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள சரக்கு வழித்தடம் ஆகியவை உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும். திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்கும் புதிய கலாச்சாரம் நாட்டில் உருவாகி உள்ளது.

2014-ம் ஆண்டில், இந்தியாவில் 65 மில்லியன் அகண்ட அலைவரிசை (NBM) சந்ததாரர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 78 கோடியை எட்டியுள்ளது. 2014-ல் ரூ.200 இருந்த ஒரு ஜிபி டேட்டா கட்டணம் தற்போது ரூ.11-12-ஆகக் குறைந்துள்ளது. உலகில் மிக மலிவாக டேட்டா கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2014-ம் ஆண்டில் 100-க்கும் குறைவான கிராமப் பஞ்சாயத்துகளே ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கப்பட்டிருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்து விட்டது. 2014-ம் ஆண்டில், சில நூறு ஸ்டார்ட்-அப் களே இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. அண்மையில் 100 யூனிகார்ன்களை உருவாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.

நாங்கள் கொள்கை, முடிவுகள், நோக்கத்தால் வளர்ச்சி பெற்று வருகிறோம். உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருப்போம். மேலும், ஒவ்வொரு அடியிலும் உங்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று பிரதமர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.