அமெரிக்க பல்கலை.யில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய வம்சாவளி மாணவி கைது

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிறந்த அசிந்தியா சிவலிங்கன் என்ற மாணவியும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்றொரு மாணவரான ஹசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் வாராந்திர பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மொரில் கூறும்போது, “பல்கலைக்கழகத்துக்குள் கூடாரங்கள் அமைப்பது என்பது விதிகளுக்கு எதிரானது. அவர்கள் கூடாரம் அமைத்து இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் நிறைய மாணவர்கள் கலந்து கொண்டனர். அசிந்தியா, ஹசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக, பலமுறை மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழகம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த இரு மாணவர்களும் இனி பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள அவர்களுக்கான தங்கும் இடத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அசிந்தியா சிவலிங்கம் பொது விவகாரங்கள் துறையில் முதுநிலை பட்டம் பயின்று வருகிறார். சையத் அதே துறையில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடாரம் அமைத்து இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அனைவரும் அதனைக் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய மாணவி ஒருவர், அவர்கள் இருவரையும் போலீஸார் கைகளைக் கட்டி கிரிமினல்கள் போல் அழைத்துச் சென்றனர் என்றார். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் பரவிய போராட்டம்: காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் பரவி வருகிறது. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. ’Gaza solidarity encampment’, அதாவது காசாவுக்கு ஆதரவாக கூடாரங்கள் அமைத்துப் போராடுதல் என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவுக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காசா போரை கண்டித்து கூகுள் நிறுவனம் – இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் அண்மையில் நீக்கியதும் நினைவுகூரத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இந்நிலையில், சர்வதேச சமூகங்கள் பலவும் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், காசாவின் வடக்கு, மத்திய பகுதிகளை துவம்சம் செய்துவிட்ட இஸ்ரேல் இப்போது தெற்கே எகிப்தை ஒட்டிய ரஃபா எல்லையில் தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.