கலைஞர் பிறந்த இல்லத்தில்…!

திருவாரூரிலிருந்து பதினைந்தாவது மைலில் உள்ள திருக்குவளை கிராமம், மணி விழா காணுகின்ற கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர்.

அங்கு அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த இல்லத்தைக் காணச் சென்றோம்.”தஞ்சை மாவட்டத்தில் அழகான சிற்றூர்களில் ஒன்று திருக்கோளிலி. திருக்குவளை என்றும் அதனை அழைப்பார்கள். எழில் நிறைந்த திருக்குளம் குளத்தைச் சுற்றி சோலை எதிரே சிவன் கோயில் மேற்கு எல்லையில் முனியன் தெற்கெல்லையில் ஐயனார் கோயில். இவையெல்லாம் நான் கண்ட திருக்குவளை. இப்போது அந்த அழகில் முக்கால் பகுதி குறைந்து விட்டது. என் தந்தையார் காலத்திலே மிகச் சிங்காரமாக இருந்த ஊர் இது…” என்று கலைஞர் திருக்குவளையைப் பற்றி நெஞ்சுக்கு நீதி நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

திருக்குவளை கிராமம், முன்னொரு காலத்தில் நிச்சயமாக அழகான சிற்றூராக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு இப்போது எஞ்சியிருக்கும் இயற்கைக் காட்சிகள் சான்றுகளாக இருக்கின்றன. “இதுதான் கலைஞர் பிறந்த இல்லம். கொஞ்சம் இருங்கள், போய் சாவி வாங்கி வருகிறேன்…” என்று கூறி விட்டு, எங்களுக்குக் கிராமத்தைச் சுற்றிக் காட்டிய திருக்குவளை தி. மு. க. செயலாளர் பாவாடைசாமி ஓடினார்.

ஊர் இளைஞர்கள் தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவும் வகையில், ஒரு நூலகமாகவும் படிப்பகமாகவும் மாற்றி அந்த இல்லத்தைக் கிராம மக்களுக்கு தன்னுடைய காணிக்கையாக அளித்திருக்கிறார் கலைஞர்.

வெளியில், ‘முத்துவேலர் நூலகம், அஞ்சுகம் படிப்பகம் (கலைஞர் மு. கருணாநிதி பிறந்த இல்லம்)’ என்ற போர்டு நம்மை வரவேற்கிறது. நுழைந்தவுடன் வாயிற்புறத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டின் மூலம் 1972-ம் ஆண்டு ஜூன் மாதம் எட்டாம் தேதி ஆளுநர் கே.கே. ஷா இந்த இல்லத்தைத் திறந்து வைத்தார்’ என்ற விவரம் தெரிகிறது.

Visit to Kalaignar’s birth house

வாயிலைத் தாண்டி வரவேற்பறையில் நுழைந்தவுடன் எதிரில் கண்ணில்படுவது கலைஞரின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகம் இருவரின் புகைப்படங்கள்.  “என் தந்தை நல்ல விவசாயி; சிறந்த வித்வான்; கவி எழுதும் ஆற்றல் பெற்ற புலவர்; வடமொழிக் கிரந்தங்களில் தனித் தேர்ச்சி பெற்றிருந்தார். பாரத, ராமாயணக் கதைகளை பண்டிதரைவிட அழகாகச் சொல்வார் . . . என் தந்தை பழுத்த கடவுள் பக்தர் விடிகிறதோ இல்லையோ, அவர் நெற்றியில் விபூதி எறிவிடும்…” என்று தன் தந்தை முத்துவேலரைப் பற்றி கலைஞர் குறிப்பிட்டிருப்பது நினைவில் நிழலாடுகிறது.

“இலை முன் உட்கார்ந்து உணவு அருந்தும் போதுகூட உன் இடுப்பில் இருந்து அம்புலி பார்க்கும் குழந்தையாகத்தானே என்னை நீ எண்ணிக் கொள்வாய்! உறங்கும் போது உன் இதயம் எனக்குத் தாலாடடும். நான் உழைக்கும்போது உன் மூச்சு எனக்குத் தென்றல்; இத்தனையும் நிறுத்திவிட்டு நீ எப்படி அம்மா என்னைப் பிரிவாய்? நீ பிரியவில்லை! நீ என்னோடு கலந்து விட்டாய்! உன்னிடம் கற்றுக் கொண்ட கனிவு, கருணை, எளிமை, இனிமை, பண்பு, பழக்கம், பகைவரிடமும் பரிவுகாட்டும் தன்மை இவைகளை வளர்த்து வளர்த்து நான் முழுமை பெறுவதற்குத் துணையாக நீ என்னோடு கலந்து விட்டாய் என்பது தான் உண்மை” என்று அன்னை அஞ்சுகம் அம்மையாரைப் பிரிந்தபோது கலைஞர் எழுதிய வரிகள் நெஞ்சில் அலை மோதுகின்றன. தந்தை – தாய் படத்துக்குப் பக்கத்தில், வரிசையாக கலைஞரின் 8-வயது; 20-வயது; 28-வயது: 39-வயது; 40-வயது; 43-வயது: 46-வயது; 48-வயது என்று ஃபிரேம் போட்ட புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. நடு நாயகமாக அறிஞர் அண்ணாவின் புகைப்படம்.

கீழே நான்கு பக்கச் சுவர்களில் வரிசையாக. 1953-ம் ஆண்டில் ‘கலைஞர்’ சிறப்புப் பட்டம் அளிக்கப் பட்டது: ‘உலக விருது’ பெற்றது; ‘கல்லக்குடி கொண்டான்’ கலைஞரின் தோற்றம் கவிதை ‘டாக்டர்’ பட்டம் பெற்றது; இவற்றையெல்லாம் விளக்குகிற கல்வெட்டுகள்.

வரவேற்பறையை விட்டு வலப்பக்கம் நுழைந்தால் ஒரு பெரிய ஹால். அந்த ஹால் ஒரு மினி கண்காட்சியாகவே விளங்குகிறது.

கலைஞர் எழுதிய கவிதை, கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் 12-1-70-ல் சென்னை வானெலியில் நடந்த பொங்கல் கவியரங்கக் கவிதை’நெஞ்சுக்கு நீதி’ வரலாற்றின் இரண்டாவது அத்தியாயம்’அன்புள்ள தம்பி’ என்று ஆரம்பித்து ‘திராவிட நாடு’ பத்திரிகை ‘லெட்டர் ஹெட்’டில் அண்ணா, கலைஞருக்கு எழுதிய மடல் கலைஞரின் 49-வது பிறந்த நாளின்போது கலைஞரை வாழ்த்தித் தந்தை பெரியார் எழுதிய கடிதம் ஆகியவற்றைப் படித்து ரசிக்கிறோம்.

1962-ம் ஆண்டு திருச்சி மத்திய சிறைக் கைதியாக இருந்தபோது கலைஞர்  அணிந்திருந்த வில்லை AR 2303 என்ற எண்ணுடன் காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. ‘திருச்சி தேவர் மன்ற’த்தில் 17-5-58 சனி இரவு பத்து மணிக்கு, நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைமையில், ‘கலைஞர் மு. கருணாநிதி எம். எல். ஏ. நடிக்கும்’ புதுமை நாடக மன்றத்தாரின் ‘உதயசூரியன்’ நாடகம். ‘கதை-வசனம் மு. கருணாநிதி’ என்று அச்சடிக்கப்பட்ட நாடக நோட்டீஸ் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

Visit to Kalaignar’s birth house

கலைஞர் எழுதிய நாடகங்களின் பட்டியல்-சாந்தா அல்லது பழனியப்பன், மந்திரிகுமாரி, ஒரே முத்தம், தூக்கு மேடை, பரப்பிரம்மம், வாழ முடியாதவர்கள், உதயசூரியன், காகிதப் பூ, மணி மகுடம், நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, நச்சுக்கோப்பை, உன்னைத்தான் தம்பி என்று ஒரு பெரிய பட்டியல் காணப்படுகிறது.

கலைஞர் தலைமையேற்ற போராட் டங்கள், எழுதிய 49 நூல்கள், கலைஞர் பெற்ற சிறைத் தண்டனைகள், ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய பத்திரிகைகள், அவர் நிறுவிய பத்திரிகைகள், அவர் கதை-வசனம் எழுதிய திரைப்படங்களின் வரிசை போன்ற பட்டியல்கள், புள்ளி விவரங்களைப் பேசுகின்றன.

இவை எல்லாமே 1977 வரையில்தான் இருக்கின்றன.பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், இந்திரா என்று தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களோடும் கலைஞர் உரையாடும் படங் கள், முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அவர் பங்கேற்ற சில விழாக்களின் படங்கள், அவர் சாதனையைச் சொல்லும் சில புகைப்படங்கள்.

அந்தக் கண்காட்சியைப் பார்த்து விட்டு வெளியே வருகையில் ஒரு பெரிய ஹால் அங்கே மூன்று பீரோக்களில் இலக்கிய மனத்தோடு கூடிய 964 புத்தகங்கள்; அத்தனையும் கலைஞர் இந்தப் படிப்பகத்துக்காகக் கொடுத்தவை.” முத்துவேலர்-அஞ்சுகம் அறக் கட்டளையின் சார்பில் இந்த நூலகமும் படிப்பகமும், நடத்தப்படுகின்றன. தென்னன், மாறன், செல்வம், அமிர்தம் ஆகியோர் அடங்கிய அறக் கட்டளை இது.

Visit to Kalaignar’s birth house

காலை எட்டுமணிமுதல் 12 மணிவரை, மாலை 3 மணியிலிருந்து எட்டு மணிவரை நூலகம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார் பாவாடைசாமி.

சந்தானம் என்பவர் இதனைக் கவனித்துக் கொள்கிறார்.

கலைஞர் பிறந்த அந்த இல்லத்தை விட்டு வெளியே வரும்போது, அவரே தன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிரமை எழுகிறது.

கலைஞர் பிறந்த இல்லத்துக்கு நேர் எதிரே, தென்னை மரங்கள் சூழ ஶ்ரீ தியாகராஜசுவாமி குளம் குளுகுளு வென்று தென்றலை அனுப்பிக் கொண்டிருந்தது. கலைஞர் திருக்குவளையில் படித்த பள்ளிக்கூடம் தரைமட்டமாக இடிந்து, இப்போது அந்த இடத்தில் புதிய பள்ளிக் கூடமும், சத்துணவு மையக்கூடமும் எழும்பியிருக்கின்றன. “இதோ, தரை மட்டமாக இடிந்து கிடக்கிறதே! இது தான் என்னை ஆளாக்கிவிட்ட அறிவுக் கோயில்! நான் படித்த பள்ளிக்கூடம். கை விரல் தேயத் தேய ‘அரிநமோத்து சிந்தம்’ என்ற எழுத்துக்களை மணலில் எழுதி எழுதிக் கல்வி ப யின்ற இடமல்லவா இது! எதிர்காலம் எப்படி யெல்லாம் இருக்குமோ என்ற ஏக்கமோ, வாட்டமோ இல்லாமல் நிகழ்கால விளையாட்டுக்களில் கவலையற்று ஈடுபட் டிருந்த பச்சிளம் பருவம் . . .” முதல்வராக கலைஞர் திருக்குவளைக்குச் சென்றபோது தன் ஏக்கத்தையெல்லாம் இப்படி வார்த்தைகளில் வடித்தெடுத் திருக்கிறார்!

தன் பெற்றோரின் பெயர்கள் நின்று நிலைத்திடுமாறு ஏதாவதொரு அறப்பணியினை ஆற்றிட வேண்டும் என்ற கலைஞரின் நீண்ட நாளைய பேராவலின் காரணமாக, திருக்குவளையில் ஒர் நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்டதே ‘முத்துவேலர் அஞ்சுகம் தாய்-சேய் நல விடுதி.’கலைஞரின் பள்ளித் தோழரும், தி. மு. கழக தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான திரு. தென்னன் அவர்களை திருவாரூரில் சந்தித்தபோது, பழைய நிகழ்ச்சிகளில் சிலவற்றை நினைவு கூர்ந்தார்:

Visit to Kalaignar’s birth house

“சின்ன வயதிலேயே கலைஞர் தன்னைப் போன்ற சிறுவர்களும், சுயமரியாதை இயக்கத்திலும் திராவிடக் கழகத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக ‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’ ‘மாணவர் ஒற்றுமைக் கழகம்’ ஆகியவற்றை நடத்தி வந்தார். அந்தக் கழகத்திலெல் லாம் அவர் தலைவராக இருப்பார்: நான் செயலாளராக இருப்பேன் . . .

சங்கத்தின் குறிக்கோள் அனைத்தும் ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததுதான். பீடி, சிகரெட்டை யாரும் தொடக் கூடாது தீய வார்த்தைகள் பேசக் கூடாது.

எப்படியாவது சீர்திருத்த கருத்துக்களை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காக 1942-ல் ‘முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்று முதன் முதலில் ஆரம்பித்தார். படித்துக் கொண்டிருந்த காரணத்தினலே, அவர் ‘எழுத்தாளர் சேரன்’ என்ற பெயரிலும், நான் ‘செயலாளர் தென்னன்’ என்றும் போட்டு முரசொலியில் வெளியிட்டோம் . . .

இந்தத் துண்டுப் பிரசுரங்களை வெளியிடும் போதே, பள்ளியில் ‘தமிழ்நாடு தமிழ்மாணவர் மன்றம்’ என்ற அமைப்பினைத் துவக்கி நடத்தினார். . . இந்த அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக முதன்முதலாக ‘பழனியப்பன்’ நாடகம் எழுதி திருவாரூரிலே மேடையேறினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ன்னு கொடி பிடிச்சுக்கிட்டு கோஷம் போட்டுக் கொண்டு போனார். . . அப்போது அவருடைய இந்தி வகுப்பாசிரியர் இதைப் பார்த்துட்டார். . . அடுத்த நாள் காலைலே ஸ்கூலுக்குப் போனபோது ‘இந்தி ஒழிகன்னு சொன்னியா?’ன்னு கேட்டுக் கன்னத்துலே பளார் பளார்னு அறைஞ்சுட்டாரு. . . அறையை வாங்கிக்கிட்டு கலைஞர் பேசாம வகுப்புக்குப் போயிட்டார். . .

அதே இந்தி ஆசிரியர், கலைஞர் முதல்வரான பிறகு சென்னையில் நடந்த ஹோமியோபதி மகாநாட்டில், வரவேற்க காத்திருந்தார்.1942-ல் திருவாரூருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். கதர் குல்லாய், கையிலே காங்கிரஸ் கொடியோட தேச விடுதலைக்காகப் பிரசாரம் செய்வார். அவர் மேடையில பிரசாரம் செய்யமாட்டார். வீடு வீடாகத்தான் போய் பிரசாரம் செய்வார் . அப்படிப் பிரசாரத்தில் ஈடுபடும்போது, யாராவது காங்கிரஸ்காரர் வீட்டில் சாப்பிடுவார் . . . சாப்பிட்டுவிட்டு உடனேயே பிரசாரத்தைத் தொடருவார். இந்தக் காங்கிரஸ்காரரின் தியாகத்தைப் பாராட்டி எங்கிட்டே கலைஞர் பேசுவார் . . ‘நாம கூட கட்சிப் பிரசாரத்தை இம்மாதிரி தியாக மனப்பான்மையோடுதான் செய்யனும். ஆடம்பரம் கூடாது’ன்னு சொல்வார். சின்ன வயசிலே இந்தக் காங்கிரஸ்காரரோட தியாகம் அவர் மனசிலே ஆழமா பதிஞ்சதாலேதான், கலைஞர் முதலமைச்சரானவுடனேயே காங்கிரஸ் தியாகிகளுக்கு நல்ல சலுகைகளையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாடு மாணவர் மன்றத்துக்காக நாங்க ஒரு நாடகம் நடத்தினோம் இல்லையா? அந்த நாடகத்திலே, ‘உண்மையில் கடவுள் உண்டோ, இல்லையோ உணர்வாய் தமிழா நீ! ஒருவன் மாடியிலும் ஒருவன் கோடியிலும் உலவிட ஏன் வைத்தாய்?’ என்று கடவுளை ஒரு பிச்சைக்காரன் கேட்பது போல ஒரு பாடல் எழுதியிருந்தார். . . அதை நினைவிலே வச்சிக்கிட்டுத்தான் கலைஞர் முதலமைச்சரானவுடனே ‘குடிசை மாற்று வாரியம்’ என்பதை ஏற்படுத்தி, குடிசையில் வாழ்ந்தவர்களையெல்லாம் மாடியில் குடியிருக்க வைத்தார்…’கடவுளை நாம ஏற்றுக் கொள்கிறோமா என்பதைவிட, கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் என் கொள்கை’ என்று சின்ன வயசிலேயே என்னிடம் கூறுவார்.

நானும் கலைஞரும் திருவாரூரிலுள்ள கமலாலயம் குளத்தில் அடிக்கடி நீச்சல் அடிக்கப் போவதுண்டு. பாதிவரை நீந்திச் சென்று நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டுத் திரும்பிவிடலாம் என்று நான் சொல்வேன். ஆனால், கலைஞரோ ‘இந்தக் கருணாநிதி பாதிக் கிணறு தாண்டுபவனல்ல… எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதை முழுசாக முடிப்பவன்’னு சொல்லிட்டு, தொடர்ந்து நீந்தி விட்டுத்தான் திரும்புவார்…”

– கேயெஸ்

(03.06.1984 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.