GTvRCB : `ஜாக்ஸ் மின்னல் வேக சென்ச்சூரி; துணை நின்ற கோலி!' – வென்றது பெங்களூரு

திடீரென வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது பெங்களூரு எக்ஸ்பிரஸ். புதிதாக வண்டியில் ஏறியிருக்கும் வில் ஜாக்ஸ்தான் இந்த வேகத்திற்கு காரணம். குஜராத்திற்கு எதிராக 200+ டார்கெட்டை 16 ஓவரிலேயே எட்டி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது பெங்களூரு

GT v RCB

`A Well Paced Innings’ – சாய் சுதர்சன் மற்றும் குஜராத்தின் இன்னிங்க்ஸ்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டும். மெல்ல சுழலத் தொடங்கி பின் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டும் ரயில் சக்கரம் போல, பவர்பிளேவில் 42/1 எனத் தொடங்கி மிடில் ஓவர்களில் 96 ரன்களைக் குவித்து பின் டெத் ஓவர்களிலோ 62 ரன்களைக் களவாடினர். சாய் சுதர்சனின் பக்குவம் ததும்பிய இன்னிங்க்ஸும், ஷாருக்கானின் கேமியோவும் இணைந்து செய்த மாயமே அது.

இத்தொடர் முழுவதுமே பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில்தான் குஜராத்தின் ரன்ரேட் அடிவாங்கியது. அந்தக் கதையாடலை மிடில் ஓவர்களில் மாற்றி எழுதியது இக்கூட்டணி. சாய் சுதர்சனின் பலம் பொதுவாகவே சுழல் பந்துகளை சூறையாடுவது தான். வேகம் அவரைக் கட்டிப் போடும், இத்தொடரில்கூட இதற்கு முன்னால் ஆடிய போட்டிகளில் அதற்கு எதிராக 122 தான் அவரது ஸ்ட்ரைக்ரேட், 8 முறை ஃபாஸ்ட் பௌலர்களிடம்தான் தனது விக்கெட்டை இழந்திருந்தார். அதனாலேயே இந்த ஸ்ஸோ பிட்ச் அவர் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. சுழல்பந்துகளை 205 ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்களை விளாசினார் என்றால் வழக்கத்திற்கு மாறாக 148 ஸ்ட்ரைக்ரேட்டில் ஆடி வேகப்பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

அரைசதம் 34 பந்துகளில் வந்திருக்க அடுத்த 15 பந்துகளில் 34 ரன்களைக் குவித்து விட்டார். ஷாருக்கானுடனான பார்ட்னர்ஷிப்பில் அவரது கை ஓங்கி இருந்தது என்றால் இறுதியில் பட்லருடனான கூட்டணியில் சாய் சுதர்சனின் கரமே ஓங்கியது. மும்பைக்கு மத்திய ஓவர்களில் திலக் வர்மாமின் பேட் எந்தளவு நிலைத்தன்மையோடு ரன்களைக் குவிக்கிறதோ அதேபோல் குஜராத்துக்கு சாய் சுதர்சனின் ஆட்டமும் இந்தாண்டு இருந்து வருகிறது. 10 போட்டிகளில் 418 ரன்களைக் குவித்திருக்கும் சாய் சுதர்சன் 30 ரன்களுக்குக் கீழே எடுத்தது ஒருமுறை மட்டுமே. ஆங்கரிங் ரோலில் தன்னைப் பொருத்திக் கொள்வதோடு அணியின் அச்சாணியாகவும் மாறி தன்னைச் சுற்றி மற்றவர்களை இயங்க அனுமதிக்கும் அவரது அணுகுமுறை அணிக்கு அனுகூலமாகிறது.

Shahrukh

ஐபிஎல்லின் எந்தப் போட்டியிலும் மத்திய ஓவர்களில் களமிறங்கிடாத ஷாருக்கானை சோதனை முயற்சியாக இந்தப் போட்டியில் குஜராத் களமிறக்கியது. அது அபரிதமான பலனைக் கொடுத்தது. ஸ்லோ பிட்சாகவே இருந்தாலும் தனது பவர் ஹிட்டிங்கையும் டைமிங்கையும் ஒன்றாக இணைப்பதன் மூலமாக பெரிய ஷாட்களை அசிரத்தையாக அடிக்க முடியும் என்பதனை அற்புதமாக ஷாருக்கான் நிகழ்த்திக் காட்டினார். இத்தொடரில் முதல்முறையாக குஜராத் மத்திய ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது என்றால் அதற்கான ஒரே காரணம் ஷாருக்கானின் அதிரடி தான். டெத் ஓவர்களில் நுழைவதற்குள் சிராஜின் ரிவர்ஸ் ஸ்விங்கிங் யார்க்கர் மட்டும் அவரை வீழ்த்தாமல் இருந்திருந்தால் இக்கூட்டணி இலக்கை இன்னமும் பெரிதாக மாற்றி இருக்கும்.

ஆர்சிபியும் தொடக்கம், கரண் ஷர்மா நீங்கலாக மற்ற சுழல்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு, ஃபீல்டிங் என ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டிருந்தனர். இருப்பினும் குஜராத் அடித்ததில் 60 சதவிகிதம் ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களில்தான் வந்திருந்தது. அதனை கட்டுக்கோப்பான பௌலிங்கால் தடுக்க முயற்சித்திருந்தால் இலக்கினை இன்னமும் குறைத்திருக்கலாம்.

ஆர்சிபிக்கு பெரிய அக்னிப் பரிட்சையாகப் பார்க்கப்பட்டது அவர்கள் குஜராத்தின் அற்புதமான சுழல்பந்து வீச்சுப் படையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான். ஏனெனில் பட்டிதர், லாம்ரோர், தினேஷ் கார்த்திக் தவிர்த்து இத்தொடரில் மற்ற எல்லோருடைய சுழல்பந்து வீச்சுக்கு எதிரான ஸ்ட்ரைக்ரேட்டும் 130-க்கும் கீழேதான் வட்டமிட்டது. வில் ஜாக்ஸ் கூட வெறும் 111 ஸ்ட்ரைக்ரேட்டோடே ஆடியிருந்தார். ஆனால் இப்போட்டி ஆர்சிபியின் பேட்டிங்கை புதுப் பொலிவோடு காட்டியிருந்தது.

Jacks

மேக்ஸ்வெல் திரும்பியதால் 4 ஓவர்சீஸ் ஸ்லாட்களும் கச்சிதமாக நிரப்பப்பட்டு இருந்ததோடு பேட்டிங் பலமடங்கு வலிமை பெற்றிருந்தது. பேட்டிங்கைப் பொறுத்தவரை இதுதான் அவர்களுடைய Perfect Squad என்று சொல்ல வேண்டும். பின் ஏர் தாங்க இருக்கிறது என்ற நம்பிக்கையோ என்னவோ முன் ஏர் ரிஸ்க் ஃப்ரீ கிரிக்கெட்தான் ஆடியது. ஸ்பின் பரிட்சையிலும் அவர்கள் தோற்கவில்லை. 11 ஸ்பின் ஓவர்களை சந்தித்த ஆர்சிபி அதில் 124 ரன்களை வாரிக் குவித்திருந்தது. இந்தப் புள்ளியில்தான் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. 54 பந்துகளில் ஆர்சிபி சுழல்பந்து வீச்சாளர்கள் வெறும் 89 ரன்களையே கொடுத்திருந்தனர், ஆனால் குஜராத் சுழல் பந்துவீச்சோ அதனை இரட்டிப்பாக்கி மொத்தமாகத் தோற்று இருந்தது. ஆகமொத்தம் சுழலால் வெல்லும் என்ற குஜராத் குறித்த கருத்து சுழலாலேயே உடைக்கப்பட்டது. அதுவும் ரஷித் கானை வில் ஜாக்ஸ் எதிர்கொண்ட போட்டியின் கடைசி ஓவர் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஸ்பின்னை சந்திப்பதில் தொடக்கத்தில் தடுமாறி 25 பந்துகளில் 37 ரன்களை எட்டியிருந்த வில் ஜாக்ஸ் அடுத்த 16 பந்துகளில் 63 ரன்களை நம்ப முடியாத ஸ்ட்ரைக்ரேட்டில் குவித்திருந்தார்.

சாய் சுதர்சன் எப்படி குஜராத்தின் அச்சாணியாக மாறினாரோ கோலியின் ஆட்டமும் அதுபோலவே ஆணிவேராகக் காலூன்றி அணியை தன்னைச் சுற்றி தழைத்து கிளை பரப்ப அனுமதித்தது. அவரது குறைந்த ஸ்ட்ரைக்ரேட், பவர்பிளேவுக்கு எதிராக பந்துகளை சந்திக்கத் திணறுவது, ஸ்பின்னுக்கு எதிரான பலவீனம் என பலவற்றைக் குறித்தும் பல தரப்பிலிருந்தும் அவரது இன்னிங்ஸ்களும், அவர் வசமுள்ள ஆரஞ்சுக் கேப்பும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டன. 160 என்னும் அவரது ஸ்ட்ரைக்ரேட், சாய் கிஷோருக்கு எதிராக லாங் ஆனில் ஒன்று லாங் ஆஃபில் ஒன்று என்று அனுப்பிய அந்த பேக் டு பேக் சிக்ஸர்கள், ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர்களுக்கு எதிரான பவுண்டரிகள், கடந்துள்ள 500 ரன்கள் ஆகியவை எல்லாம் அதற்கான பதிலைக் கூறிவிட்டன. உண்மையில் மறுமுனையில் நின்று யார் வேண்டுமானாலும் போட்டியை வென்று தரலாம். ஆனால் அதற்குரிய சுதந்திரத்தை தருவதுதான் கோலியின் பேட். அதுதான் அவரது அணுகுமுறை.

ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்திலான வெற்றி என்பது மட்டுமல்ல விஷயம் அதனை எந்த அழுத்தமும் இல்லாமல் ஆர்சிபி செய்து காட்டி இருப்பதும்தான். மீதமுள்ள போட்டிகளையும் வென்றே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இருந்தாலும் அடுத்தடுத்த வெற்றிகள் தந்துள்ள மொமெண்டம் அதனை சற்றே இலகுவாக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.