நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் படம் ரிலீஸ் : எப்படி இருக்கிறது ‛விக்ரம்' – முதல்பார்வை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛விக்ரம்'. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் ஜூன் 3 இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பற்றி முதல் முன்னோட்டத்தை இங்கு பார்க்கலாம்…

யுத்தத்தால் அதோ அதோ விடியுது… சத்தத்தால் அராஜகம் அழியுது… ரத்தத்தால் அதோ தலை உருளுது, சொர்கங்கள் இதோ இதோ தெரியுது, பகைவனை அழிப்பது முறையே…. ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே…. ஆம் அழிப்பது புலிகளின் குணமே…. எட்டிப்போ இதோ புலி வருகுது… திட்டத்தால் அடாவடி ஒழியுது… சித்தத்தில் மனோபலம் வருகுது… மொத்தத்தில் அதோ பகை அழியுது… என்கிற இந்த பாடல் வரி 1986ல் வெளிவந்த விக்ரம் படத்தில் எழுதினாலும் இப்போது வெளிவந்துள்ள இந்த கதைக்கும் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.

விக்ரம் படத்தை பொருத்தவரையில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன் மகனை கொலை செய்த கும்பலை பழி வாங்குகிறார் கமல். போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கையில் எடுத்த கதை தான் இந்த விக்ரம் படத்தின் ஒரு வரிக்கதை. இது ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் தான் படத்தின் ஹைலைட்.

போதை பொருள் கடத்தல் கும்பலால் கமல் மகன் காளிதாஸ் கொல்லப்பட இவரின் மகனை வளர்க்க கமல் படும் சிரமங்களுடன், பாச போராட்டத்துடன் மகனை கொன்றவர்களை பழிவாங்கும் தந்தையாக அதிரடியாக அதகளம் செய்துள்ளார் கமல். நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். அவருக்கு சந்தான பாரதி நரேன், டீனா ஆகியோர் உதவுகிறார்கள்.

சந்தனமாக பல் கட்டி மோசமான வில்லனாக படத்தில் விஜய்சேதுபதி வருகிறார். அவருக்கு ஷிவானி, மகேஸ்வரி மைனா என மூன்று மனைவிகள். வெளிநாட்டுக்கு போதை பொருகள் அனுப்புவதில் கை தேர்ந்தவர். அவர் அறிமுக காட்சியே படு பயங்கர மாக இருக்கிறது. அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி ரோலில் கன கச்சிதமாக நடித்துள்ளார் பஹத் பாசில்.

படம் முழுக்க சண்டைக்காட்சிகள் தான். ஆக் ஷன் காட்சிகளில் தூள் படுத்தி இருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு. துப்பாக்கி, கத்தி, பீரங்கி என்று படம் முழுக்க ஒரே சத்தமாக உள்ளது. ஆங்காங்கே இரத்தம் தெறிக்கிறது. படத்தின் நீளம் ஜாஸ்தி, அதுவே படத்திற்கு ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. படத்தில் வரும் கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். அனிருத் இசையில் போர்கண்ட சிங்கம், பத்தல பத்தல பாடல்கள் தவிர மற்றவை சுமார் ரகம் தான். படத்தில் ரசிகர்கள் நிச்சயம் இடைவேளை பகுதியையும், சூர்யா என்ட்ரியையும் கொண்டாடுவார்கள். அந்தளவுக்கு மாஸ் செய்துள்ளார் இயக்குனர். விக்ரம், கமல் படமா லோகேஷ் படமா என்று கேட்டால் கமல் பார்வையில் லோகேஷ் படம் என்றே சொல்லலாம். விக்ரம்… வெற்றி பெறுவான்…

‛விக்ரம்' படத்தின் விமர்சனம் விரைவில் உங்கள் தினமலர் இணையதளத்தில் இன்னும் சற்று நிமிடங்களில்….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.