வாட்ஸ்-அப் குழுவில் பெண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு ஏலம் விட்ட டாக்டர்கள் கைது

திருப்பதி:
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், ஜி கோந்தூரு மண்டலத்தை சேர்ந்தவர் துர்கா இவருக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் துர்கா 3-வதாக கர்ப்பமானார். 3-வதாகவும் ஆண் குழந்தையாக பிறந்தால் தனது கணவர் ஏற்க மாட்டார் என பக்கத்து வீட்டை சேர்ந்த ஆர்.எம்.பி. டாக்டர் புஷ்பலதாவிடம் தெரிவித்துள்ளார்.எனவே குழந்தையை தத்து கொடுக்க விரும்புவதாக துர்கா புஷ்பலதாவிடம் கூறினார்.
ஆனால் துர்காவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதை கவனிக்காத டாக்டர் புஷ்பலதா மருத்துவமனைக்குச் சென்று பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பயிற்சி ஆர்.எம். பி டாக்டரான அம்ருதாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, இந்த குழந்தை விற்பனைக்கு உள்ளதாக கூறினார்.
டாக்டர் அம்ருதா குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி ரூ.3 லட்சத்திற்கு குழந்தை விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டு ஏலம் விட்டுள்ளனர்.
இந்த செய்தியை பார்த்த கமலாகர் ராவ் என்பவர் உடனடியாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அஜித் சிங் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் துர்காவிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது அனுமதியின்றி அனைத்தும் நடந்ததாகவும், சமூக ஊடகங்களில் நடந்தவை தனக்கு தெரியாது என்று கூறினார்.
இதையடுத்து சட்டவிரோதமாக தத்தெடுப்பு மோசடியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் புஷ்பலதா, அம்ருதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.