National Herald Corruption Case: நேஷனல் ஹெரால்டு வழக்கு – 13ல் ஆஜராகிறார் ராகுல்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 13 ஆம் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், ராகுல் காந்தி ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நாடு விடுதலைக்கு முன்னர், அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010 ஆம் ஆண்டில் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் உள்ளன.

இதற்கிடையே, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.

இதை அடுத்து, இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஜூன் 2 ஆம் தேதி ஆஜராகும்படி, ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் காரணமாக, 2 ஆம் தேதி ஆஜராக முடியாது என்றும், ஜூன் 5 ஆம் தேதிக்கு பிறகு இந்தியா திரும்புவதாகவும், அதற்கு பிறகு ஆஜராகிறேன் என்றும் அவகாசம் கேட்டு இருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி அவகாசம் கேட்டுக் கொண்டதை அடுத்து, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, வரும் 13 ஆம் தேதி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள சோனியா காந்தி, இந்த வழக்கு விசாரணைக்காக, வரும் 8 ஆம் தேதி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.