“சொந்தமா ஒரு படத்தை டைரக்ட் செய்யணும் – அதுதான் என் லட்சியம்!” – எஸ்.பி.பி.

‘இதுவரை பதினெட்டாயிரம் திரைப்படப் பாடல்களைப் பாடி கின்னஸில் இடம்பெறுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்’ என்கிற செய்தி சமீபத்தில் பல்வேறு நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தது.

காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து சென்னையில் பல பாடல்களுக்கு ரிக்கார்டிங் முடித்துவிட்டு, மாலை விமானத்தில் பம்பாய் புறப்பட்டு அங்கு விடியற்காலை வரை ரிக்கார்டிங்! பின்பு உடனே காலை மீண்டும் சென்னைக்கு வந்து ரிக்கார்டிங்கைத் தொடரும் அளவு பிஸியான ‘பாடல் இயந்திரம்’ எஸ்.பி.பி!

சில நாட்களுக்கு முன், கமல் நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றுக்காக வித்தியாசமான குரலில் பாடல் ஒன்றைப் பாட, அதனால் தொண்டை ரிப்பேராகி, அன்று வீட்டிலேயே உட்கார்ந்திருந்த எஸ்.பி.பி-யைச் சந்தித்தோம்.

“கின்னஸ் சாதனைக்காக வாழ்த்துகள்” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே குறுக்கிட்டார் எஸ்.பி.பி. “ஸாரி சார்! இந்த நியூஸ் எப்படிப் பரவிச்சுன்னே தெரியலே. நான் பதினெட்டாயிரம் பாடல்களைப் பாடி முடிச்சிருக்கிறது உண்மை. ஆனா, இது கின்னஸ் சாதனை யாங்கறது எனக்கே தெரியாது. ஏன்னா, லதா மங்கேஷ்கர் கின்னஸ் விஷயமே இன்னும் சர்ச்சையில்தான் இருக்கு.

அவங்களுக்கே கின்னஸில் ‘இவர் முப்பதாயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகச் சொல்கிறார்கள்’ அப்படின்னுதான் போட்டிருக்கு. இன்னும் அதுவே ஆதாரபூர்வமான தகவலா வெளிவரலை. எனவே, ஆண் பாடகர்களில் அதிக பாடல்கள் பாடியது வேண்டுமானால் நானாக இருக்கலாம்” என்று அடக்கத்துடன் கூறினார்.

S.P. Balasubrahmanyam’s Exclusive Interview

“ஓய்வேயில்லாமல் இப்படி ஊர் ஊராகப் பறந்து பாடுவது எப்படிச் சாத்தியமாகிறது?” என்று கேட்டதற்கு,“எல்லாம் ரிக்கார்டிங் விஷயத்தில் நாம் கண்டிருக்கும் கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் முன்னேற்றம்தான் காரணம்” என்று சொன்ன எஸ். பி. பி. , அதைக் கொஞ்சம் விளக்கமாகவும் புரியவைத்தார்.

“இருபது வருஷங்களுக்கு முன்னாடி நான் இந்த ஃபீல்டில் நுழையும்போதெல்லாம் ஒலிப்பதிவில் சிங்கிள் டிராக் சிஸ்டம்தான். அதாவது, பாடகர்கள் மற்றும் இசைக் குழுவில் உள்ள அத்தனை கலைஞர்களும் ஒரே இடத்தில் குழுமியாக வேண்டும். இப்படி நடக்கும் பாடல் பதிவில் பாடகர் அல்லது யாராவது ஒரு இசைக் கலைஞர் என எந்தவொரு தனி நபர் தவறு செய்துவிட்டாலும், மீண்டும் ஆரம்பித்திலிருந்தே செய்தாக வேண்டும்.

எனவே, ஒரு பாட்டு முழுமையாக ஓகே ஆகிறவரை யாரும் அந்த இடத்தைவிட்டு அசைய முடியாது. அதன் பிறகு மூன்று டிராக் வசதி வந்தது. இதில் பாடகர்கள் வாய்ஸ் தனி, இசைக்கருவிகள் தனி என்று பதிவு செய்யும் வசதி இருந்ததால் முன்பை விடக் கொஞ்சம் பெட்டராக மாறியது. அதையுமடுத்து நான்கு டிராக் வந்தபோது ஆண்குரல், பெண்குரல், பேஸ் இன்ஸ்ட்ரு மென்ட்ஸ், ரிதம் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பதிவு செய்யும் வசதி கிடைத்தவுடன்தான் நீங்கள் பாடல்களை ஸ்டீரியோபோனிக் முறையில் கேட்க முடிந்தது. இன்று நிலைமை ரொம்ப முன்னேறி, இருபத்து நான்கு டிராக் வரை போய்விட்டது.

எனவே, சின்னச் சின்ன விஷயங்களைக்கூடத் தனியாகச் சேர்ப்பதோ, நீக்குவதோ சாத்தியம். இதனால் என்னைப் போன்ற பிஸியான பாடகர்களுக்கு நேரம் வேஸ்ட் ஆவதில்லை. பாடலின் அனைத்துப் பகுதிகளும் ரெடியாகப் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு நேரம் கிடைக்கும் போது அந்தந்த நகரத்துக்குப் போய் என் பகுதியைப் பாடி முடித்துவிட்டு வந்து விடுவேன்” என்று டிராக் சிஸ்டத்தின் சரித்திரத்தையே அத்துப்படியாகச் சொன்னார்.

“நீங்கள் பாடும்போது ஒவ்வொரு ஹீரோவின் குரலுக்குத் தகுந்த மாதிரி குரல் மாற்றிப் பாடுவதாக ரசிகர்கள் பாராட்டிப் பேசுவதுண்டு. இது நீங்கள் மிகுந்த சிரத்தை எடுத்துச் செய்யும் ஒரு விஷயமா?” என்ற கேட்டவுடன், வாய்விட்டுச் சிரித்தார் எஸ்.பி.பி.

“எனக்கு ஸ்கூல் காலத்திலிருந்தே மிமிக்ரி செய்யும் பழக்கம் உண்டு. இருந்தாலும் சுருளிராஜன், செந்தில் போன்ற காமெடியன்களுக்கு மட்டும்தான் நான் வாய்ஸ் மாத்தி தமாஷா பாடியிருக்கேனே தவிர, இதுவரை தமிழில் ஹீரோக்களுக்குன்னு தனித்தனி குரலில் நான் பாடினதே கிடையாது. ஆனா, எனக்கே நிறைய பாராட்டுக் கடிதங்கள் வரும். ‘நீங்கள் அப்படியே மோகன் மாதிரி பாடறீங்க. கமல் மாதிரி பாடறீங்க சார் ’ அப்படீன்னெல்லாம் சொல்லுவாங்க.

நீங்க படத்தில் ஒன்றிப் போய் அந்த ஹீரோவோட வாயசைவைப் பார்க்கும்போது ‘சைக்கலாஜிக்கலா’ உங்களுக்கு அந்த எஃபெக்ட் கிடைக்குதே தவிர, நான் அந்த மாதிரியெல்லாம் பாடறதே கிடையாது. ஆனா, ஒரு காலத்தில் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் நாகேஸ்வரராவுக்கும் குரல் மாத்திப் பாடியிருக்கேன். காரணம், அப்போ இவங்க ரெண்டு பேருக்கும் கண்டசாலா பின்னணி பாடி, ரொம்ப டாப்ல இருந்த சமயம், திடீர்னு இறந்துட்டாரு.

பிறகு நான் நுழைஞ்சு சம்பந்தமேயில்லாத ஒரு வாய்ஸில் பாடும்போது, ஜனங்க அதை ஒப்புக்கலை. எனவே, உடனே அவங்களுக்கேத்த மாதிரி பாட ஆரம்பிச்சேன். அப்போகூட என். டி. ஆர்., நாகேஸ்வரராவ் இவங்களோட ஸ்டைலை மட்டும்தான் இமிடேட் செய்தேனே தவிர, வாய்ஸை மாத்திப் பாடலை.”

S.P. Balasubrahmanyam’s Exclusive Interview

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம்னு சொன்னாலே பாட்டுப் பாடும்போதே இயற்கையா சிரிக்கிறது, வித்தியாசமான சேஷ்டைகள் பண்றது உங்களோட ஸ்பெஷாலிட்டின்னு எல்லாருக்கும் தெரியும். இது நீங்களா உங்க கற்பனையில் செய்யறதுதானா, இல்லே இசையமைப்பாளர்கள் கேட்கறதுக்குத் தகுந்த மாதிரி செய்வீங்களா?”

“அது ஒரு தமாஷான கதை. திரையுலகில் நுழைஞ்சவுடனே நமக்குனு ஒரிஜினாலிடி வேணுங்கறத்துக்காக என்னோட திறமையாலும் கற்பனை வளத்தாலும் டூயட், டான்ஸ், இப்படி அந்தந்த பாடல்களுக்கேற்ற மாதிரி ஏதாவது சிரிக்கிறது, சத்தம் கொடுக்கிறது இதெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்.

அது ரொம்ப பாப்புலர் ஆகி, இப்போ ‘என்ன சார், இந்தப் பாட்டுல நீங்க சிரிக்கவே இல்லை’ அப்படின்னு தயாரிப்பாளர் கேட்டு வாங்கற அளவுக்குப் போயிடுச்சு. இருந்தாலும் எந்த இடத்தில் எது பண்ணினா நல்லா இருக்குங்கிறதை நானே முடிவு செய்து அதை அளவோட நிறுத்திக்குவேன்.”

“ ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்துக்குப் பிறகு திரும்ப நடிக்கலையா?”

“பாடறதை நிறத்திட்டு நடிகனா மாற எனக்கு இஷ்டமில்லை. ஆனாலும் நல்ல ரோல் வந்தா அதுக்குன்னு டைம் ஒதுக்கி செஞ்சு தருவேன். அடுத்ததா, ஒரு தமிழ்ப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் மெயின் ரோலில் நடிக்கப்போறேன்.”

“பாடகர், இசையமைப்பாளர், நடிகர்- இப்படி மூன்றையும் சிறப்பா செஞ்ச காட்டிட்டீங்க… அடுத்து ஏதாவது சாதிக்கிறதுக்குனு ஐடியா வெச்சிருக்கீங்களா..?”

“நிறைய இருக்கு. அதெல்லாம் ரிடையர்மென்ட்டுக்குப் பிறகுதான். இன்னும் அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு வருஷத்தில் பாடறதை நிறுத்திடுவேன். அதன் பிறகு சினிமாத் துறையின் ஒவ்வொரு பகுதியையும் ரொம்ப ஆழமா தெரிஞ்சுக்கப் போறேன்.

டைரக்டர், எடிட்டர், காமிராமேன் – இப்படி திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட வெவ்வேறு பேரிடம் கொஞ்ச நாள் கூட இருந்து வொர்க் பண்ணி நிறைய கற்றுக் கொண்ட பிறகு, கடைசியா சொந்தமா ஒரு படத்தை டைரக்ட் பண்ணப் போறேன். அதுதான் என் லட்சியம்” என்றார் எஸ்.பி.பி.

– ரமேஷ் பிரபா

(29.10.1989 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.