பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் கருணாநிதியின் ‘சங்கத் தமிழ்’ நூல்: தஞ்சை தமிழ்ப் பல்கலை. முடிவு

Tamil University translates Karunanidhi’s Sangathamizh book to French and German: மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுதிய ‘சங்கத் தமிழ்’ நூலை பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மலர்கள் தூவினர். அதோடு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதன் பின்னர், துணைவேந்தர் திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடுவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக இந்தப் பணிகளை மேற்கொள்ள ஆணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.12 லட்சம் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இப் பணியை மேற்கொள்ள எனது தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: திருவெறும்பூர்: ஒரு போலீஸ் நிலையத்தில் இத்தனை பிரச்னை; இதை கவனிங்க டி.ஜி.பி சார்!

அதன்படி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கந்தசாமி, அரங்கன், பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழ் வளர்ச்சி  இயக்கக இயக்குநர் அருள், தமிழ்ப் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத்துறை தலைவர் வீரலெட்சுமி ஆகியோர் கொண்ட குழு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சஙகத்தமிழ் நூலை பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்க் கனி பதிப்பகத்தின் வழி வெளியிட்டுள்ள சங்கத்தமிழ் நூலை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்ய மொழிபெயர்ப்பாளர்கள் பிரெஞ்சு சச்சிதானந்தம் – பிரான்ஸ், ஜெர்மன் மொழிக்கு சுசீந்திரன் – ஜெர்மனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓராண்டு சிறப்பு பயிலரங்கங்கள் நடத்தப்பட உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் துணை வேந்தர் திருவள்ளுவன்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.