ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி முதல் பார்ட்டி வரை – நடந்தது என்ன?

தெலங்கானா: ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதான 5 பேரில் 3 பேர் சிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதில் பல கட்சிப் பிரமுகர்களின் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கூறி பாஜக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. பிறந்தநாள் பார்ட்டியாக ஆரம்பித்த கொண்டாட்டம் பாலியல் வன்கொடுமையில் முடிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 28-ல் நடந்த பார்ட்டி: கடந்த மே 28-ஆம் தேதியன்று ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல பப் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருமே அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 11, 12 வகுப்பு மாணவ, மாணவிகள் என பப் மேலாளர், போலீஸில் கூறியுள்ளார். அவர்களில் பலர் அரசியல், சிலர் அதிகாரப் பின்புலம் கொண்டவர்கள் என்றும் மேலாளர் கூறியுள்ளார்.

மேலும், “பார்ட்டிக்கு 150 பேர் வருவார்கள் என்று சொல்லப்பட்டாலும் சற்று நேரத்தில் 180 பேர் வரை வந்துவிட்டனர். நாங்கள் இது 18 வயதுக்கும் கீழ் உள்ளோரும் கலந்து கொள்ளும் பார்ட்டி என்பதால் மது விருந்துக்கு அனுமதிக்கவில்லை. சிகரெட் கூட புகைக்கக்கூடாது என்று கூறியிருந்தோம்.

மாலை 6 மணி வரை பார்ட்டி நடந்தது. பார்ட்டி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி புறப்பட்டார். அவர் தனியாக காரில் வராததால் அவரை இறக்கி விடுவதாக சில மாணவர்கள் சொல்லி சிவப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றினர். அதில் எந்த வற்புறுத்தலும் தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் நண்பர்கள் போல் இயல்பாகவே பேசி சிரித்து ஏறினர். அந்தக் காரின் பின்னால் நம்பர் ப்ளேட் இல்லாத இன்னொரு கார் புறப்பட்டுச் சென்றது. அது இனோவார் கார். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்” என்று பப் மேலாளர் கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்: அதன் பின்னர் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆராய்ந்த போலீஸார், மாணவர்கள் சென்ற பென்ஸ் கார் ஜூபிளி ரோடு 37-ல் நிறுத்தப்பட்டது. அங்கே உள்ள பிரபல பேஸ்ட்ரி ஷாப்பில் அரை மணி நேரம் அனைவரும் செலவழித்துள்ளனர். பின்னர் அந்தக் கார் புறப்பட்டது. அதன் பின்னாலேயே இன்னோவா காரும் பின் தொடர்ந்தது. பின்னர் 7.10 மணிக்கு இன்னோவா காரில் இருந்த அந்தச் சிறுமி பப் வாசலில் இறக்கிவிடப்பட்டார். மாணவி ஏன் பென்ஸ் காரில் சென்று இன்னோவா காரில் இறங்கினார்? அவரை மிரட்டி கார் மாறச் செய்தனரா? – இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

பின்னர், மாணவி தனது தந்தையை அழைத்து தன்னை பப்பில் இருந்து கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளார். அவர் அங்கு 15 நிமிடங்களில் வந்துவிட அவருடன் சிறுமி சென்றுவிட்டார். தனக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்த சிறுமி வீடு செல்லும் வரை ஏதும் சொல்லவில்லை. வீட்டுக்குச் சென்ற பின்னர் அவரது பெற்றோர் சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தைப் பார்த்துள்ளனர். அப்போது அவர் தன்னுடன் காரில் வந்த சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார்.

இது குறித்து போலீஸில் சொல்ல வேண்டாம் என்று பெற்றோரும் அமைதி காத்துள்ளனர். பின்னர் 3 நாட்கள் கடந்து சிறுமியின் தந்தை ஜூபிளி ஹில்ஸ் போலீஸில் புகார் கொடுத்தார்.

சிறுமி வாக்குமூலம்: சிறுமி தற்போது காவல்துறை பரோஷா மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. சிறுமியின் வாக்குமூலத்தின்படி பேஸ்ட்ரியில் இருந்து கிளம்பும்போது அவரை இன்னோவா காரில் ஏறுமாறு நிர்பந்தித்ததாகவும், அந்தக் காரில் வேறு 5 மாணவர்கள் இருந்ததாகவும், அவர்கள் பஞ்சாரா மலைப்பகுதி அருகேவுள்ள இடத்துக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அந்த நபர்கள் சிறுமியை பப் வாசலிலேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்றனர் என்று போலீஸில் சிறுமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.