மதக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: பாஜக விளக்கம்

புதுடெல்லி: முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா கட்சியில்இருந்து தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பங்கேற்றார். அப்போது அவர், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நூபுர் சர்மாவை கண்டித்து உத்தர பிரதேசத்தின் கான்பூரில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடந்த 3-ம் தேதி கடையடைப்பு நடத்தப்பட்டது. அப்போது இருதரப்புக்கு இடையே கலவரம் வெடித்து பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சூழலில் பாஜக மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, நூபுர் சர்மாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், “பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக நீங்கள் கருத்துதெரிவித்திருப்பதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளோம். கட்சியில் நீங்கள் வகித்த பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நூபுர் சர்மா கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே விவகாரம் தொடர்பாக டெல்லி பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் நவீன் ஜிண்டாலும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

பாஜக விளக்கம்

நூபுர் சர்மா விவகாரம் குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல்லாண்டு கால வரலாற்றில் ஒவ்வொரு மதமும் செழித்தோங்கி வளர்ந்திருக்கிறது. அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது. எந்தவொரு மதத் தலைவரும் அவமதிக்கப்படுவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

மதத்தின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்படுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க மாட்டோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்ற இந்திய அரசமைப்புசாசனம் உரிமை வழங்கியுள்ளது.

இப்போது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். அனைவரும் சமமாக,கண்ணியத்துடன் வாழும் வகையில் மிகச் சிறந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பாற்றி வளர்ச்சியின் பலன்களை அனைத்து தரப்பு மக்களும் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் முன்னேற் றமே முக்கியம். இவ்வாறு அருண் சிங் தெரிவித்துள்ளார்.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.