கேரளாவில் கொளுத்தும் வெயில்: வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 5 பேர் உயிரிழப்பு

பாலக்காடு: கேரளாவில் வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, கடும் வெயில் காரணமாக நான்கு வாக்காளர்களும், கோழிக்கோட்டில் ஒரு வாக்குச்சாவடி முகவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. மக்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த நிலையில், கேரளத்தில் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு, ஒட்டப்பாலம் அருகே உள்ள கனாங்காட்டைச் சேர்ந்த சந்திரன் (68) வாணி விலாசினி பள்ளியில் இன்று காலை வாக்களித்துவிட்டு வெளியேவரும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பாலக்காடு – விளையோடியைச் சேர்ந்த கும்போட்டையில் கந்தன் (73) என்பவர் வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்து இறந்தார். பாலக்காட்டில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

திரூரைச் சேர்ந்த அலிக்கண்ணக்கல் தரக்கல் சித்திக் (63) நிறைமருதூர் அருகே வாக்களித்துவிட்டு வீடு திரும்பியபோது உயிரிழந்தார். சோமராஜன் (82) என்பவர் ஆலப்புழா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கோழிக்கோடு நகர வாக்குச்சவாடியில் எல்டிஎப் கூட்டணியின் வாக்குச்சாவடி முகவரான மாலியேக்கல் அனீஸ் (66) வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மலப்புரத்தில் வாக்குச் சாவடிக்கு செல்லும் வழியில் சைது ஹாஜி (வயது 75) என்பவர் பைக் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதோடு, அட்டிங்கல் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் முரளீதரன் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.