ஜிம் உடற்பயிற்சியின்போது மாரடைப்பால் இளைஞர் மரணம் – நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அதற்கேற்ற உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரன் என்பவரது மகன் ஸ்ரீ விஷ்ணு. இவருக்கு வயது 27. இவர் மதுரை சிம்மக்கல் பகுதியில் லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீவிஷ்ணு மாடக்குளம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதோடு, பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதீத ஆர்வம் கொண்ட விஷ்ணு ஜிம்மில் அதிக நேரம் ஒதுக்கி பல்வேறு கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்  நேற்று முன்தினம் ஜிம்மில் 100 கிலோவுக்கு மேல் எடை தூக்கும் பயிற்சியில் விஷ்ணு ஈடுபட்டு கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீ விஷ்ணுவிற்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த விஷ்ணுவை அருகில் இருந்த இளைஞர்கள் தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாத நிலையில் உடற்பயிற்சியின் மீதான அதீத ஈடுபட்டால் தொடர்ச்சியாக உடற் பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீ விஷ்ணு மூன்று வருடமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவரது உயிரிழப்பில் பல்வேறு சந்தேங்களும் யூகங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக அவருடைய வயதுக்கு ஏற்ப எடை தூக்கும் பயிற்சியை மேற்கொண்டிருக்கலாம், உணவுக்கட்டுப்பாடு, தூக்கமின்மை, தேவையற்ற மருந்துகள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள், உடற்பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

image
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஜாஸ்மின் கூறுகையில், தற்போதைய இளைஞர்கள் உடல் எடை, பாடி பில்டிங் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டு விளம்பரங்களை கண்டு அதை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அதற்கேற்ற உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், பயிற்சி செய்பவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற எடை தூக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும் எனவும், கீரைகள் மற்றும் புரத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
பேக்கிங் உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும் எனவும், மது, புகை உள்ளிட்ட பழக்கங்கள் இருக்கக்கூடாது என தெரிவித்தார். புரோட்டீன் தரும் முட்டையின் வெள்ளைக்கரு, இறைச்சி, மீன், பாதாம், பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என கூறுகின்றார். மேலும் குறுக்குவழியில் உடல் எடையை குறைக்க முயற்சிக்க கூடாது எனவும் அறிவுரை வழங்குகிறார். மேலும் இன்றைய இளைஞர்கள் ஊசிகளை செலுத்தி உடல் எடையை குறைப்பதாக வரும் தகவல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

image
மருத்துவர் முத்துப்பாண்டி கூறுகையில், இன்றைய இளைஞர்கள் உடற்பயிற்சி நிலையகளுக்கு செல்லும் முன் அவருடைய உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், முழு உடல் பரிசோதனை, மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்கள் இருக்கும், வயதிற்கு ஏற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும், வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி, ஓய்வு, சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், இதில் எது ஒன்றை விட்டாலும் மற்ற அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என கூறினார்.

உடற்பயிற்சி ஆர்வலர் ஜெயச்சந்திரன் கூறுகையில், இன்றைய இளைஞர்கள் உடனடியாக உடல் எடை மற்றும் பாடி பில்டிங் செய்வதற்காக ஏஎம்பி டெர்மின் மற்றும் மனோதத்துவத்திற்கு பயன்படுத்தும் மருந்துகளை பயன்படுத்துவதாலும் சில சமயம் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாகவும், ஜிம்க்கு செல்லும் இளைஞர்கள் தங்கள் உடல்நலக்கோளாறுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்: காய்ச்சல் பற்றிய வதந்திகள் – இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.