மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து தீ: வீடும் எரிந்து நாசம்

திருமலை: தெலங்கானாவில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்ததில் வீடும் எரிந்து நாசமானது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. அதே நேரம், இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் வெடித்து, வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் உலகம் முழுவதும் சமீப காலமாக அதிகமாகி வருகிறது. இதில், சில இடங்களில் உயிர் பலியும் நடந்துள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் மின்சார ஸ்கூட்டரியின் பேட்டரி வெடித்து, வீடே தீப்பிடித்து நாசமாகி இருக்கிறது. தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டம்,  பொத்த சிக்கோடா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்சார ஸ்கூட்டரை வாங்கினார். இதனை கடந்த 9ம் தேதி இரவு தனது பக்கத்து வீட்டில் நிறுத்திவிட்டு, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு சார்ஜ் போட்டுள்ளார். நள்ளிரவில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே எழுந்து வெளியே வந்த அவர், பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த மின்சார வாகனம் தீப்பிடித்து எரிவதை  பார்த்து அதிர்ந்தார். பேட்டரி வெடித்ததால், ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில், சிறிது நேரத்தில் வீட்டுக்கும் தீ மளமளவெனப் பரவியது.வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் துர்க்கையா ஐதராபாத்தில் வசிப்பதால், அவரது அனுமதியுடன் லட்சுமி நாராயணா தனது மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்த நிலையில் ஸ்கூட்டருடன் வீடும் எரிந்தது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.