Ante Sundaraniki – அடடே சுந்தரா: எத்தனை ட்விஸ்ட்டூ?! நானி – நஸ்ரியாவின் ரொமான்டிக் காமெடி எப்படி?

தன் மதம் சார்ந்து அதிக பிடிப்புள்ள இரு குடும்பங்களின் பிள்ளைகளுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் `அடடே சுந்தரா’ (Ante Sundaraniki) படத்தின் கதை.

கடல் கடந்து போனாலே தோஷம் பற்றிக்கொண்டுவிடும் என நம்பும் பிற்போக்கான ஆச்சார குடும்பம் நானியுடையது. மருத்துவமனையிலும் மதம் பார்க்கும் குடும்பம் நஸ்ரியாவுடையது. மதத்தில் ஏழாம் பொருத்தமாய் இருக்கும் இந்த இரு குடும்பங்களிலிருந்து நானியும் நஸ்ரியாவும் காதலித்தால் என்ன நடக்கும்?

இரு குடும்பங்களின் நிலையையும் நன்கு உணர்ந்த நானி பொய் சொல்ல ஐடியா யோசிக்கிறார். ஓராயிரம் பொய் தேவைப்பட எல்லாவற்றையும் ஜோடிகள் சொல்ல, அதில் சில உண்மையாய் மாற, அடுத்தடுத்து நடக்கும் சிக்கல்களும், சமாளிப்புகளும்தான் ‘அடடே சுந்தரா’.

Ante Sundaraniki

தெலுங்கில் Ante Sundaraniki. தெலுங்கில் சிரஞ்சிவியின் வெறித்தன ரசிகராக வரும் நானியின் ஜூனியர் கதாபாத்திரம், தமிழில் கமலின் ரசிகராக இடம்பெற்றிருக்கிறது. மற்றபடி இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

ஆக்‌ஷன் படங்களை ஒரு பக்கம் கவனித்து வந்தாலும், நானியின் சிம்மாசனம் இருப்பதோ காமெடிக் கோட்டையில்தான். தான் இடம்பெறும் காட்சிகளில் எல்லாம் வெறும் தன் முகபாவங்களை வைத்து மட்டுமே சிரிக்க வைக்கக்கூடிய தென்னிந்திய நடிகர்களுள் நானி முக்கியமானவர். வரிக்கு வரிக்கு காமெடியில் அசத்தியிருக்கிறார்.

“எங்க அம்மா இதெல்லாம் என்னோட ஆத்ம திருப்திக்கு பண்றாங்க. அவங்க உண்மையாவே என்னைய நினைச்சு பெருமைப்பட்டா கண்ல தண்ணி வர ஆரம்பிச்சுடும்” என சொல்லும் இடத்தில் இன்னும் அழகு.

இத்தனை ஆண்டுகள் கழித்து நஸ்ரியாவுக்குத் தெலுங்கில் முதல் படம். வீட்டுக்குள் ஒரு பொய்யை மறைத்து வாழ வேண்டிய கதாபாத்திரம். நஸ்ரியாவின் க்யூட் எக்ஸ்பிரசன்களை கொஞ்ச நேரமே காட்டி போங்கடித்துவிட்டு, எமோசனலாக அந்தக் கதாபாத்திரத்தை மாற்றிவிட்டார்கள்.

அடடே சுந்தரா | Ante Sundaraniki

எதிர்மறை கதாபாத்திரங்கள் இல்லாத படத்தில் துணை நடிகர்கள்தான் எல்லாமே. அந்த வகையில் இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். நரேஷ், ரோஹினி, அழகம் பெருமாள், நதியா, ஹர்ஷ் வர்தன், அனுபமா, குட்டி நானி, குட்டி நஸ்ரியா, ப்ருத்விராஜ், ராகுல் எனப் பக்காவான நடிகர்கள் தேர்வு.

‘Mental Madhilo’, ‘Brochevarevarura’ வரிசையில் இயக்குநர் விவேக் ஆத்ரேயாவிற்கு இந்தப் படமும் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. தன் முந்தைய படங்கள் தொடர்பான சின்னதொரு சுவாரஸ்யத்தையும் இதிலும் இணைத்திருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளை யோசிக்கவிடாமல், சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளை படம் முழுக்க விதைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். சுற்றிச் சுற்றி சொல்லப்படும் கதையில், இடைவேளைக்குப் பிறகுதான் நிஜக்கதையே ஆரம்பிக்கிறது என்பது தனிக்கதை.

தங்களின் சிறு வயது கதாபாத்திரங்களே சீனியர்களிடம் பேசிக்கொள்ளும் காட்சியும் செம்ம ஐடியா. படத்தில் வரும் அதீதமான பிற்போக்கு காட்சிகள் எல்லாவற்றுக்கும் ரோஹினி பேசும் க்ளைமாக்ஸ் வசனம் சம்மட்டை அடியாக விழுந்துவிடுகிறது. அதேபோல், “இல்ல இதெல்லாம் நீங்க சாப்ட்டா நான் ஃபீல் பண்ணுவேன்” என் நானி சொல்ல, “சரி, ஃபீல் ஆவு” என ஹர்ஷ்வர்தன் சொல்வது இந்தியாவில் நடக்கும் உணவு அரசியலுக்கு எதிரான நுண்பகடி. இப்படிப் படம் முழுக்க வசனங்களால் நம்மை ஆச்சர்யப்படுத்திவிடுகிறார் இயக்குநர்.

அடடே சுந்தரா | Ante Sundaraniki

என்ன அந்தக் குறிப்பிட்ட மூடநம்பிக்கைச் சார்ந்த காட்சிகள் மட்டும் கொஞ்சம் அதிகம். அதைச் சற்று குறைத்திருக்கலாம். முன்னுக்குப் பின் பிண்ணிப் பிணைந்து குழப்ப முடிச்சுகளாக நகரும் கதையைக் குழப்பாமல் தெளிவாக நமக்குப் புரிய வைக்கிறது ரவி தேஜா கிரிஜலாவின் படத்தொகுப்பு. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும் அருமை.

இந்த வீக்கெண்டில் குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய ஒரு ஜாலி என்டெர்டெய்னர் இந்த `அடடே சுந்தரா!’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.