அதானிக்கு மின் திட்டத்தை வழங்க கோட்டாபயாவுக்கு அழுத்தம் கொடுத்த மோடி; அறிக்கையை வாபஸ் பெற்ற இலங்கை அதிகாரி

தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திற்கு 500 மெகாவாட் மின் திட்டத்தை வழங்க வேண்டும் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை உயர் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார். பின்னர், அந்த அதிகாரி தான் கூறியதை திரும்பப் பெற்றார். கோட்டாபயாவின் அலுவலகமும் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் திட்டம் அமைப்பது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையின் சிலோன் மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, கொழும்புவில் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி, ராஜபக்சேவுடனான தனது உரையாடலின் போது, ​​மின் திட்டத்தை அதானிக்கு அளிக்குமாறு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகக் கூறினார்.

ஃபெர்டினாண்டோ பொது நிறுவனங்களுக்கான குழுவில் உரையாற்றினார். அப்போது, ராஜபக்சே மோடியின் அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் கூறினார். இந்த மின் திட்டத்தை அதானி நிறுவனத்திடம் கொடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாக மூத்த அதிகாரி குழுவிடம் தெரிவித்தார்.

ராஜபக்சேவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தைத் தொடர்ந்து அதிபரால் அழைப்பு விடுக்கப்பட்ட போதே ராஜபக்சேவுக்கு, பெர்டினாண்டோவுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஃபெர்டினாண்டோ விரைவில் தான் கூறியதை வாபஸ் பெற்றார், அவர் உணர்ச்சிவசப்படுகிறவர் என்று கூறினார்.

கோட்டபய ராஜபக்சே, முதலில் ட்விட்டரில் ஒரு விரைவான மறுப்பை வெளியிட்டார். அதில் அவர், “மன்னாரில் காற்றாலை மின் திட்டம் வழங்கப்படுவது குறித்து, எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்தத் திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் பொறுப்பான தகவல் தொடர்பு தொடரும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

பின்னர், “இந்த திட்டத்தை அழுத்தம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து” அவருடைய அலுவலகம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கோ தாம் அங்கீகாரம் வழங்கவில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சிலோன் மின்சார வாரியத் தலைவர் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தெரிவித்த கருத்தை அதிபர் வன்மையாக நிராகரித்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது கடுமையான மின் பற்றாக்குறையில் இருப்பதாகவும், மெகா மின் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவதை அதிபர் விரும்புவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய திட்டங்களை வழங்குவதில் தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தப்படாது. பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களுக்கான பரிந்துரைகள் குறைவாகவே உள்ளன. ஆனால், திட்டங்களுக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இது இலங்கை அரசாங்கத்தால் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறல் முறைக்கு இணங்க கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய மின் திட்டங்களை வழங்குவதில் ஒப்பந்தப் போட்டி தேவையில்லை என்று இலங்கை சட்டங்களை மாற்றிய சில நாட்களுக்குப் பிறகு இந்த சர்ச்சை வந்துள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக இந்தியா அல்லது அதானி குழுமத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

அதானி குழுமம் கடந்த சில வருடங்களாக இலங்கையில் தனது வணிகத்தை அதிகரித்து வருகிறது. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை 51 சதவீத பங்குகளுடன் அபிவிருத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் கடந்த ஆண்டு ஒப்பந்தம் பெற்றது. மார்ச் மாதம் அதானி குழுமம் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதில் ஒன்று மன்னாரிலும் மற்றொன்று இலங்கையின் வடக்குப் பகுதியில் பூனேரியிலும் அமைக்கப்பட உள்ளது.

நெருக்கடியில் இருக்கும் ராஜபக்சே அரசாங்கம், மோடியின் நண்பர்களை நாட்டிற்குள் கொள்ளைப்புறம் வழியாக அனுமதிப்பதற்காக அவர்களை தாஜா செய்வதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடந்த மாதம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது. இது நாட்டின் பல பகுதிகளிலும் கலவரங்களுக்கு வழிவகுத்தது. கோட்டாபய ராஜபக்சேவின் சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், அதிபர் பதவி விலக மறுத்து மஹிந்தவிற்கு பதிலாக முறையான போட்டியாளரான பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தார்.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு, குறிப்பாக எரிபொருளுக்கு, சர்வதேச அளவில் செலுத்த போதுமான பணம் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாததால், எரிபொருள் பற்றாக்குறை உள்ளது.

இந்தியா, ஜனவரி முதல் அண்டை நாடான இலங்கைக்கு கடனாகவும் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற வழிமுறைகள் மூலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் உதவியை வழங்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.