கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கந்துவட்டி தடுப்புசட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார். கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகர் காமரஜாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மனைவி செல்வி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் கடை வைத்து நடத்திவரும் ஆறுமுகம் மற்றும் பூரணம் ஆகியோரிடம் அவசர தேவைக்காக முத்துராமலிங்கம் மற்றும் செல்வி 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். இதற்கு மாத வட்டி தொகையாக 10 ஆயிரம் ரூபாய் கட்டி வந்துள்ளனர்.
image
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாங்கிய பணத்திற்கான வட்டித்தொகையை முத்துராமலிங்கம் வறுமை காரணமாக தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் இருவரும் பணம் வாங்கிய முத்துராமலிங்கம் மற்றும் செல்வி ஆகியோரை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து வட்டி பணம் கூடுதலாக செலுத்துமாறு தெரிவித்ததோடு, அடிக்கடி சாலையில் நின்றுகொண்டு அவமரியாதையாக பேசியதாகவும், முத்துராமலிங்கம் இல்லாதபோது அவருடைய மனைவி செல்வியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
image
இதனையடுத்து வட்டிப்பணம் கேட்டு துன்புறுத்துவதாகக்கூறி பாதிக்கப்பட்ட செல்வி கீரைத்துறை காவல்நிலையில் அளித்த புகாரையடுத்து ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகிய இருவர் மீதும் கந்துவட்டி தடுப்புச் சட்டம், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆறுமுகம் என்பவர் கீரைத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஆறுமுகம் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்திருந்த இரண்டு புரோ நோட்டுக்கள் பறிமுதல் செய்யயட்டன.
image
வட்டி செலுத்தாத நிலையில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இம்மாதிரியான கந்துவட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் எவராவது இருப்பின் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், மேலும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.