கேரளாவில் படகு வீடு மூழ்கி விபத்து ஜாலிக்காக தங்கியவர்கள் தப்பினர் மீட்க சென்ற மீனவர் பரிதாப பலி: சென்னை வாலிபர்கள் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் படகு வீடு மூழ்கிய விபத்தில் சென்னை இன்ஜினியர்கள் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீட்பு பணியில் ஈடுபட்டவர் பரிதாபமாக பலியானார். கேரள  மாநிலம், ஆலப்புழா சர்வதேச சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள ஏரியில்  நூற்றுக்கணக்கான படகு வீடுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணம்  செய்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  ஒரு படுக்கையறை கொண்ட படகு வீடு முதல் 10க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட  பிரம்மாண்டமான படகு வீடுகள் வரை இங்கு உள்ளன. குறைந்தது ஒரு மணிநேரம் முதல்  ஒருநாள் வரை படகுகள் வாடகைக்கு கிடைக்கும். பகலில் ஏரியில்  படகில் பயணம்  செய்து இயற்கை அழகை ரசிக்கலாம். இரவில் படகிலேயே உள்ள அறைகளில் தங்குவதற்கு  ஸ்டார் ஓட்டல்களை போன்ற வசதிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை  வேளச்சேரியை சேர்ந்த லோகேஷ், பிரேம் மற்றும் ஹரி ஆகிய 3  சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருதினங்களுக்கு முன் ஆழப்புழாவை சேர்ந்த ரமேசன்  என்பவருக்கு சொந்தமான ஒரு படகு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். இரவில்  மூன்று பேரும் படகில் தங்கினர்.  நேற்று முன்தினம் அதிகாலை 5  மணியளவில் அவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது அறையில் தண்ணீர்  தேங்கி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தனர். சிறிது நேரத்தில் தண்ணீர்  மளமளவென அறைக்குள் வரத் தொடங்கியது.இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள்  கூக்குரலிட தொடங்கினர். சத்தத்தை கேட்டு வெளியே தூங்கிக் கொண்டிருந்த  படகின் ஊழியர் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டார். அதற்குள்  படகின் முக்கால் பாகம் மூழ்கி விட்டது. இதனால், அவர்களின் உடமைகளை எடுக்க  முடியவில்லை.  அப்பகுதியை சேர்ந்த பிரசன்னன் (54)  என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மீனவரான இவருக்கு நன்றாக நீச்சல்  தெரியும். தகவல் கிடைத்தவுடன் பிரசன்னன் சென்று, படகின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பேக் உள்பட  சில உடமைகளை எடுத்து கரை சேர்த்தார்.மீதமுள்ள பொருட்களை  எடுப்பதற்காக சென்ற பிரசன்னன் பின்னர் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. இதனால், தீயணைப்பு  வீரர்கள் விரைந்து பிரசன்னனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4  மணி நேரத்திற்குப் பின்னர் அவரது உடல் படகுக்கு அடியில் சிக்கியிருந்ததை மீட்டனர். படகின் இன்ஜினை  குளிர்விப்பதற்காக படகின் அடியில் ஒரு டேங்கில் தண்ணீர் நிரப்பி  வைக்கப்படும். அந்த டேங்க் உடைந்தது தான் படகுக்குள் தண்ணீர் புகுந்தது என  விசாரணையில் தெரிய வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.