ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட போகேஷ்வரா யானை மறைவு: இணையத்தில் புகைப்பட அஞ்சலி

பந்திப்பூர்: ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானை என அறியப்பட்டு வந்த போகேஷ்வரா கர்நாடகாவில் உயிரிழந்தது. அந்தச் செய்தியை அறிந்து கானுயிர் ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பந்திப்பூர் – நாகர்ஹோளே காப்புக் காட்டுப்பகுதியில் கடந்த 11-ஆம் தேதி அன்று யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த யானையின் உடலை பார்த்த வனவிலங்கு அதிகாரிகள் உயிரிழந்தது போகேஷ்வரா யானை என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதன் நீளமான தந்தத்திற்காக கானுயிர் ஆர்வலர்கள் மத்தியிலும், புகைப்படக் கலைஞர்கள் மத்தியிலும் போகேஷ்வரா மிகவும் பிரபலம். பலரும் இந்த யானையை தங்களது மூன்றாவது கண்ணான கேமரா கண்களில் பதிவு செய்துவிட வேண்டும் என விரும்புவார்கள். உள்ளூர் தொடங்கி உலகப் புகழ் பெற்ற ஒளிப்பட கலைஞர்களும் போகேஷ்வராவை நிழற்படம் மற்றும் வீடியோ காட்சிப் படங்களாக படம் பிடித்துள்ளனர்.

மிஸ்டர். கபினி என அறியப்படுகிறது போகேஷ்வரா. இதன் ஒரு தந்தம் 8 அடி நீளமும், மற்றொரு தந்தம் 7.5 அடி நீளமும் உடையது. தற்போது அந்த தந்தங்களை காட்சிக் கூடத்தில் அதன் நினைவாக வைக்க வனத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

வயோதிகம் காரணமாக இந்த யானை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானையின் வயது சுமார் 70 இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மரணம் இயற்கையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபினி ஆற்றங்கரையோரம் வாழ்ந்து, உயிரிழந்துள்ள இந்த யானைக்கு சூழலியல் ஆர்வலர்கள் பலரும் அதன் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.