‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு மகாராஷ்டிரா ஆதரவு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை: இந்தியாவின் 5-வது மாநிலமாக மகாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்றுமுன்தினம் (ஜூன் 12) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். முன்னதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்ற ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய ‘கொள்கை விளக்க கையேட்டை’ முதல்வரிடம் வழங்கினார்.

இது தொடர்பாக, மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் உத்தவ் தாக்கரேவை ஜக்கி வாசுதேவ் இன்று சந்தித்து ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பேசினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக இவ்வியக்கத்திற்கு மகாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜக்கி வாசுதேவ், “நமஸ்காரம் உத்தவ் தாக்கரே, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. வளர்ச்சி மாநிலமான மகாராஷ்ட்ரா, உங்களுடைய தலைமையின் கீழ் ஆரோக்கியமான மண்ணையும், வளமான விவசாய சமூகத்தையும் உருவாக்கும் பணியில் சிறந்த வழிகாட்டியாக திகழட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், “ஜக்கி வாசுதேவ் அவர்கள் எங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்ததை பெருமையாக கருதுகிறோம். அவர் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களுடன் மண் காப்போம் இயக்கம் குறித்து கலந்துரையாடினார். இவ்வியக்கத்திற்கும், எங்களது நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும் பிற முன்னெடுப்புகளுக்கும் மகாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 10.000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், “15 முதல் 18 இன்ச் வரையிலான மேல்புற மண் தான் பூமியின் செழிப்பிற்கும் நாம் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 40 முதல் 50 வருடங்களில் நாம் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம். இப்போது இருக்கும் மக்கள் தொகையை கொண்டு பூமியில் ஒரு இன்ச் வளமான மண்ணை உருவாக்க 13,000 வருடங்கள் தேவைப்படும். அந்தளவிற்கு இது கடினமானது.

கடந்த காலத்தில் நம் நாடு எதிர்கொண்ட கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள ‘பசுமை புரட்சி’ உதவியது. ஆனால், அது தற்காலிகமான தீர்வு தான். மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு நாம் நம்முடைய விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் அனைவரும் மண் அழிவிற்கு காரணமாக உள்ளோம். எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்” என்றார்.

ஆதித்யா தாக்கரே பேசுகையில், “நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். மண் வளத்தை மீட்டெப்பதில் நாம் இந்த தலைமுறையிலேயே செயல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால், நமக்கு நல்ல எதிர்காலம் இருக்காது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.