ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா பின்னணி

மக்களவை தேர்தல் நேரத்தில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரதேச தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளனர். ஆனால் அந்த கட்சியுடன் இன்னமும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இதற்குகட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி காங்கிரஸ் தொண்டர்களின் நலனை காக்க முடியாததால், தலைவர் பதவியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை.

காங்கிரஸ் கட்சி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உருவான கட்சிதான் ஆம் ஆத்மி. அந்த கட்சியுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்ததை டெல்லி காங்கிரஸ் எதிர்க்கிறது.

வடமேற்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உதித் ராஜ், வடகிழக்கு டெல்லியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கண்ணையா குமார் ஆகியோர் டெல்லிகாங்கிரஸ் கட்சிக்கு முற்றிலும் புதியவர்கள். இவர்களுக்கு சீட் வழங்கியது, டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காங்கிரஸாரின் கருத்துக்களை கட்சி மேலிடம் கேட்பதில்லை. சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கண்ணையா குமார் புகழ்கிறார்.

இதுபோன்ற மோசமான சிந்தனை, தவறான கருத்துக்கள் டெல்லி காங்கிரஸ் தொண்டர்களுடன் ஒத்துப்போகவில்லை. டெல்லி காங்கிரஸ் தலைவராக நான் எடுத்த பல முடிவுகளை டெல்லி பொறுப்பாளர் தீபக்பாப்ரியா தடுத்து விட்டார். டெல்லி காங்கிரஸில் என்னால் எந்த நியமனங்களையும் செய்ய முடியவில்லை. இவ்வாறு அர்விந்தர் சிங் லவ்லி கூறியுள்ளார்.

பாஜகவை எதிர்த்து போட்டியிட இண்டியா கூட்டணி கடந்தாண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்திரி ஆகியோர் ஏற்கனவே வெளியேறி பாஜகவுடன் இணைந்து விட்டனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து டெல்லியில் 4:3 என்ற விகிதத்தில் தொகுதி பங்கீடு செய்து கொண்டது.

மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி,கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியும், வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்தன. இதை எதிர்த்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.