திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது! டெண்டர் விவகாரம் குறித்த அண்ணாமலை டிவிட்…

சென்னை; ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் முறைகேடு தொடர்பாக,  திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை டிவிட் பதிவிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கான தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்,  அதன் காரணமாக, தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிகஅரசு மறுப்பு தெரிவித்ததுடன், தற்போது அந்த டெண்டர் வேறு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இன்று காலை பேட்டியளித்த மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படவில்லை. எனவே ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் விவகாரத்தில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழகஅரசு எடுத்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார். அவரது பதிவில்,

“கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை தமிழக பாஜக வெளியிட்டது.

அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியைப் பார்த்தோம். தமிழக பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக பாஜக அளித்த புகாரையும் திமுக அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும், ஆவின் ஹெல்த் மிக்ஸ் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்”

என்று அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.