மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி நியமனம் – தமிழக வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இந்திய வனப் பணி அதிகாரிகள் (IFS) 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக எம்.ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசுத் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 51 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்திய வனப் பணி (Indian Forest Service) அதிகாரிகள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த ஏ.உதயன், வண்டலூரில் உள்ள நவீன காட்டுயிர் பாதுகாப்பு மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றப் பிரிவின் சிறப்பு செயலராக இருந்த எம்.ஜெயந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வனம், காட்டுயிர் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக இருந்த மிதா பானர்ஜி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெறுவதுடன், வன ஆராய்ச்சி, கல்வி பிரிவு முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை இயக்குநராக இருந்த பி.ராஜேஸ்வரி, வனம் மற்றும் காட்டுயிர் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குநராக இருந்த தீபக் எஸ்.பில்கி, சுற்றுச்சூழல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த பி.சி.அர்ச்சனா கல்யாணி, தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றப் பிரிவு சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வண்டலூரில் உள்ள நவீன காட்டுயிர் பாதுகாப்பு மைய இயக்குநராக இருந்த சேவா சிங், கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.