“மிகப்பெரிய பண்பாட்டு பங்களிப்பு இது" – `தமிழ் விக்கி' இணையத்தளத்தை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன்!

மே 7-ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கப்பட்ட `தமிழ் விக்கி’ இணையத்தளம் இலக்கியம், பண்பாடு சார்ந்த கலைக்களஞ்சியமாக உருவாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான பல ஆளுமைகள் இதில் பங்காற்றியுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி, இதன் முக்கியத்துவம் குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது…

“தமிழிலக்கியம்‌, கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின்‌ தொகுப்பாக ஜெயமோகன்‌ மற்றும்‌ அவரது நண்பர்கள்‌ இணைந்து உருவாக்கியுள்ள `தமிழ்‌ விக்கி’ இணையக்கலைக்‌ களஞ்சியம்‌ மிக முக்கியமான முன்னெடுப்பு. மூத்த படைப்பாளிகளும்‌ தலைசிறந்த கல்வித்துறை ஆய்வாளர்களும்‌ இதன்‌ ஆசிரியர்‌ குழுவில்‌ இருப்பது தனிச்சிறப்பு.

தமிழ்ப்‌ பண்பாட்டிற்குப்‌ பங்களிப்பாற்றிய எழுத்தாளர்கள்‌, அறிஞர்கள்‌, கலைஞர்கள்‌, இதழாளர்கள்‌ பற்றிய பிழைகளற்ற தகவல்‌ களஞ்சியமாக இது திகழ்கிறது. வெறும்‌ தகவல்களின்‌ குவியலாக இல்லாமல்‌, புகைப்படங்கள்‌, ஆதாரங்கள்‌, மேலதிகமாக வாசித்து அறிந்துகொள்ளத்‌ தேவையான உரலிகள்‌ (இணையத்‌ தொடுப்புகள்‌) என செறிவாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்‌ விக்கியில்‌ இடம்பெற்றுள்ள கட்டுரைகள்‌, ஆங்கிலத்திலும்‌ மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.”

“நாம்‌ மறந்துவிட்ட, நாமறியாத ஆனால்‌, நமது பண்பாட்டிற்குப்‌ பலவகைகளில்‌ பங்களித்த பல்வேறு ஆளுமைகளைப்‌ பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடன்‌ ஏராளமான கட்டுரைகள்‌ தமிழ்‌ விக்கியில்‌ தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்‌ பொருட்செலவில்‌, அமைப்பு பலத்துடன்‌ நிகழ வேண்டிய காரியத்தை ஜெயமோகனும்‌ அவர்களது நண்பர்களும்‌ `இது எம்‌ கடமை’ எனும்‌ தளராத தன்முனைப்புடன்‌ நிறைவேற்றி இருக்கிறார்கள்‌”

கமல்ஹாசன் அறிக்கை
கமல்ஹாசன் அறிக்கை

“நேர்த்தியான வளம்‌ மிக்க மொழி நடை “தமிழ்‌ விக்கியின்‌” சிறப்பம்சம்‌. பள்ளி மாணவர்கள்‌ முதல்‌ ஆய்வாளர்கள்‌ வரை அனைத்து தரப்பினருக்கும்‌ பயன்படும்‌ வகையில்‌ இதை உருவாக்கியவர்களின்‌ உழைப்பும்‌ அர்ப்பணிப்பும்‌ பாராட்டுக்குரியவை.

எனது நண்பரின்‌ சாதனையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தவும்‌, பயன்படுத்திக்கொள்ளுங்கள்‌ என்று நினைவூட்டவும்‌ இன்று மீண்டும்‌ ஒருமுறை தமிழ்‌ விக்கியை அறிமுகப்படுத்துகிறேன்‌. இத்தகையை இணையக்‌ கலைக்களஞ்சியத்தின்‌ வரலாற்றுத்‌ தேவையையும்‌, பண்பாட்டுத்‌ தேவையையும்‌ உணர்ந்து இதைப்‌ பயன்படுத்துங்கள்‌. பங்களிப்பாற்றுங்கள்‌ என்று உங்களைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.