ஒற்றைத் தலைமை சர்ச்சை: ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமரசம் ஏற்படுத்த மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார். இப்பிரச்சினையில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமரசம் ஏற்படுத்த, கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதிநடக்க உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை கோஷம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரையும் அவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த 16-ம்தேதி செய்தியாளர்களை சந்தித்தஓபிஎஸ், ‘‘எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றிய மூத்ததலைவர்கள் 14 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். அக்குழு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தும் நபர்களாக ஒருங்கிணைப்பாளர்கள் இருக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை மூத்த தலைவர்கள் மூலமாக இபிஎஸ்ஸுக்கு தெரிவித்துள்ளேன். ஈகோ இல்லாமல் அவருடன் பேச தயாராக உள்ளேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால்தான் இப்பிரச்சினை பூதாகரம் ஆனது. இப்பிரச்சினை யாரால் வந்தது என இபிஎஸ்ஸும், நானும் விவாதித்து சம்பந்தப்பட்டவர்களை கண்டிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த விவரங்களை கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை அன்றைய தினமே சேலத்தில் இபிஎஸ்ஸை சந்தித்து தெரிவித்தார்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘ஓபிஎஸ்வெளிப்படையாக பேசியது, கட்சியினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தொடர்புகொண்டு, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையை வரவேற்றுள்ளனர்.

குறிப்பாக, ‘உயர்நிலைக் குழுவில் சென்னையில் 4 பேர், கொங்கு மண்டலத்தில் 4 பேர் என நியமிக்காமல், தமிழகம் முழுவதும் பரவலாக நியமிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியதையும் வரவேற்றுள்ளனர்’’ என்றனர்.

இதற்கிடையே, சென்னையில் மூத்த நிர்வாகிகள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் 4-வதுநாளாக நேற்று ஆலோசனை நடத்தினார். சேலத்தில் இபிஎஸ்ஸை சந்தித்துவிட்டு வந்த தம்பிதுரையும் ஓபிஎஸ்ஸை சந்தித்தார்.

இந்தசந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் நடந்தது. பின்னர், மீண்டும் இபிஎஸ்ஸை சந்திப்பதற்காக தம்பிதுரை புறப்பட்டுச் சென்றார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை செய்தியாளர்களிடம் கூற மறுத்துவிட்டார்.

அழிவுக்கு வழிவகுக்கும்

ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் கூறியதாவது: ஒற்றைத் தலைமை, இரட்டைத்தலைமை பிரச்சினையை எப்படி சுமுகமாக தீர்ப்பது, மீண்டும் ஆட்சிக்குவருவதற்கு கட்சி வலுவாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்துவிவாதித்தோம்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இதை ரத்து செய்ய முடியாது. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டுதான் எந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். தானாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. அப்படி கொண்டு வந்தாலும் சட்டப்படி செல்லாது. தவிர, ஒற்றைத் தலைமை என்ற தீர்மானம், கட்சியை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்டபடி ஜூன் 23-ல் பொதுக்குழு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, வைகைச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து மூத்த தலைவர் பொன்னையனிடம் கேட்டபோது, ‘‘ஓபிஎஸ் – இபிஎஸ் நேரில் சந்தித்து பேசினால் பிரச்சினை முடிந்துவிடும்.

அதற்கான முயற்சிகளை மூத்த தலைவர்கள் எடுத்து வருகிறோம். ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து கட்சித் தலைமையும், பொதுக்குழுவும் முடிவு செய்யும். திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.