தனியார்மயம், அதிக கட்டணம்… `கோவை – சீரடி தனியார் ரயிலை அரசே இயக்கவேண்டும்' – வலுக்கும் கோரிக்கை

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே வலையமைப்பையும், மிக அதிகமானப் பணியாளர்கள், பயணிகளையும் தன்னகத்தே கொண்டது இந்தியன் ரயில்வே. நாட்டின் மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயின் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களை `பாரத் கௌரவ்’ எனும் திட்டத்தின்மூலம் தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுத்தது மத்திய பா.ஜ.க அரசு! முதல்கட்டமாக பாரத் கௌரவ் திட்டத்தின்படி, சாய்பாபா வாழ்ந்த இடமாக கருதப்படும் சீரடிக்கு தமிழ்நாட்டின் கோவை உட்பட இந்தியாவின் ஐந்து பெருநகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்க ரயில்வே துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்தியன் ரயில்வே

அந்த வகையில், கோவையைச் சேர்ந்த `எம்.என்.சி ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் கோவை – சீரடிக்கு ரயில் இயக்கும் உரிமத்தைப் பெற்றது. சரியாக கடந்த ஜூன் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு, நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை கோவை – சீரடிக்கு இயக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஒருபுறம் ஆன்மீகவாதிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், அதிகமான கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தனர்.

அந்த நிலையில், சி.பி.ஐ.எம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம். உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல… தனியார் பக்தி மட்டுந்தான்! இரயில்வே நிர்வாகமே உத்தரவை திரும்பப்பெறு. ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க!” என கடுமையாக விமர்சனம் செய்தார்.

சு.வெங்கடேசன்

தொடர்ந்து, தனியார் ரயில்வே கட்டணம் குறித்து கண்டன விளக்க அறிக்கையும் வெளியிட்டார். அதில், கோவையிலிருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாய். ஆனால் அவர்கள் வசூலிப்பது 2,500 ரூபாய் .மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2360. தனியார் கட்டணம் ரூபாய் 5000. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4 ஆயிரத்து 820 ரூபாய். ஆனால் தனியார் கட்டணம் 7000 ரூபாய். குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 8 ஆயிரத்து 190. தனியார் கட்டணம் 10000 ரூபாய். அதாவது ஸ்லீப்பர் கட்டணம் ரெண்டு மடங்கு. குளிர்சாதன படுக்கை மூன்றடுக்கு இரண்டடுக்கு ஆகியவை ஒன்னரை மடங்கு. முதல் வகுப்பு ஒண்ணேகால் மடங்கு. கட்டணக் கொள்ளை!” என தெரிவித்தார்.

கோவை-சீரடி

மேலும், “தனியாருக்கு உரிமை கட்டணம் முன்பு 40 லட்சம் என்று தீர்மானித்து பின்னர் அதிலும் பதினோரு லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா? நாங்கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம் . ரயில்வே அமைச்சர் அண்மையில் சென்னை வந்தபோது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அடித்துச் சொன்னார். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் ரயில் என்றால் ஒரு கட்டண சலுகையும் கிடையாது. ஏன் முதியோர் கட்டண சலுகையும் கிடையாது. அது மட்டுமல்ல ரயில்வேயை போல ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு. இதுதான் தனியார்மயம். இந்த வண்டியில் டிக்கெட் பரிசோதகர்கள் தனியார் பரிசோதகர்கள். தனியார் வண்டி ஆனால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த நிலையில், இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து லாபம் வரும் பயணி வண்டிகளும் தனியாருக்கு 2031 க்குள் தாரை வார்க்கப்படும். அனைத்து சரக்கு ரயில்களும் 2031க்குள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும் , சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டு தான் சீரடி ரயில்” என காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்தியன் ரயில்வே

அதேபோல, பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயையும் ஒட்டுமொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான தொடக்கப்புள்ளிதான் இது, உடனடியாக இதை தடுத்துநிறுத்த வேண்டும் என தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தென்னக ரயில்வே தொழிலாளர்கள், டி.ஆர்.இ.யு, எஸ்.ஆர்.எம்.யு உள்ளிட்ட ரயில்வே தொழிலாளர் யூனியன்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்த நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “கோவை – சீரடி இடையே தொடங்கப்பட்டுள்ள தனியார் ரயில் சேவை, பொதுத்துறைக்கும், மக்களுக்கும் எதிராக உள்ளதால் இதை தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிற்சாலைகள், ஆன்மீகத் தலங்களை இணைக்க ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

டி.ஆர்.பாலு

இதில், தனியார் சேவையை அனுமதிப்பதால் இந்திய ரயில்வேயின் பங்கு பறிக்கப்படுவதாக அமையும். இந்த ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம், ரயில் சேவையை இயக்கும் தனியாருக்கு மட்டுமே லாபம். எனவே, தனியாருக்கு விடப்பட்ட கோவை-ஷீரடி ரயில் சேவையை உடனடியாக திரும்ப பெற்று, தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்தியன் ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.