நயன்தாரா படத்திற்கு இரண்டு வருடங்கள் உழைத்தேன்: ஒளிப்பதிவாளர் தமிழ்

நயன்தாரா நடிப்பில் தயாராகி ஓடிடியில் வெளியாகி உள்ள படம் ஓ2 (ஆக்சிஜன்). மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பது தான் 'ஓ2' படத்தின் கதை. படம் பற்றி மாறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் வெகுவாக பாரட்டப்படுகிறார்.

இந்த படத்தில் பணியாற்றியது பற்றி அவர் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு இயக்குனர் கதை சொன்ன போதே நான் கதையோடு பயணிக்க தொடங்கி விட்டேன். ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகள் இருக்க வேண்டும், அப்போது தான் படம் ரசிகர்களிடம் சென்றடையும் என்பதை முன்பே முடிவு செய்ததோடு, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டேன். பேருந்து மற்றும் மண் சரிவு காட்சிகள் செட் அமைக்கப்பட்டு அதன் மூலம் படமாக்கப்பட்டாலும், படம் பார்ப்பவர்களுக்கு செட் என்பது தெரிய கூடாது மற்றும் பேருந்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களின் பதற்றம் ரசிகர்களுக்கும் வர வேண்டும், இந்த இரண்டையும் சரியாக செய்துவிட்டால் படம் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும் என்பதால், அதற்கான பணியில் தீவிரம் காட்டினேன்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக சுமார் 2 வருடங்கள் இப்படத்திற்காக நான் பணியாற்ற தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காட்சிகளையும் இப்படி தான் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை சரியான முறையில் திட்டமிட்டதும் சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஒரு காரணம். நயன்தாரா போன்ற ஒரு பெரிய நடிகையை வைத்துக்கொண்டு பணியாற்றும் போது தேவையில்லாமல் அவர்களுடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அதே சமயம், தயாரிப்பாளர் திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும், அதே சமயம் படமும் தரமாக இருக்க வேண்டும், என்ற பல சவால்கள் இருந்தது. அவற்றை சரியான முறையில் சமாளிக்க படப்பிடிப்புக்கு முன்பு 2 வருடங்களாக நான் மேற்கொண்ட பணிகள் அவற்றை சரியாக செய்ய எனக்கு பெரிதும் கைகொடுத்தது.

படம் முழுவதும் கேமராவை தோளில் வைத்து தான் காட்சிகளை படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அது தான் மிக முக்கியம். உயிருக்காக போராடும் ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்த வேண்டும், அதேபோல் ஒரு பயணியின் பதற்றமான சூழ்நிலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை மிக சரியாக ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதால், நானும் பேருந்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு கதாப்பாத்திரமாகவே பணியாற்றினேன்.

நயன்தாரா படப்பிடிப்பின் போது இந்த கதைக்களத்தையும் அதை படமாக்குவதில் இருக்கும் சிக்கல்களையும் மிக சரியாக புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பது கொடுத்ததும், ஒவ்வொரு காட்சி நடித்து முடித்ததும் என்னிடம் ”ஒகேவா தமிழ்..” என்று கேட்டது என்னால் மறக்க முடியாது. எனது இந்த சிறப்பான பணிக்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் ஒரு காரணம். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.