மங்கி குல்லாவை வைத்து இரட்டை கொலையாளியை தட்டி தூக்கியது போலீஸ்..! காதலிகளுக்கு ஆளுக்கொரு அன்பு பரிசு.!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை அயர்ன் பாக்ஸால் குத்தி கொலை செய்து நகையை பறித்துச்சென்ற ரோமியோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரை தவிக்கவிட்ட வழக்கில் மங்கிகுல்லாவால் துப்பு துலக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அன்றோ சகாய ராஜ். இவர் வெளி நாட்டில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி பவுலின்மேரி, தாயார் திரேசம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் தோட்டத்துக்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தார். பெண்களுக்கு தையல் பயிற்சியும் வழங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7ந்தேதி காலை வீட்டிற்குள் பவுலின் மேரி மற்றும் திரேசம்மாளை அயர்ன் பாக்ஸால் தலையில் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.

அவர்கள் கழுத்தில் கிடந்த இரு தங்க சங்கிலிகள் மட்டும் பறிக்கப்பட்டிருந்தது. விசாரணையை முன்னெடுத்த வெள்ளிச்சந்தை போலீசார், இந்த வீட்டின் வாசலில் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டு தையல் பயிற்சிக்கு வரும் பெண்களிடம் வம்பிழுத்து, பவுலின் மேரியால் புகாருக்குள்ளான, 20க்கும் மேற்பட்ட கஞ்சா குடிக்கிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் துப்பு துலங்கவில்லை.

இந்த வழக்கில் தோட்டத்துக்கு வெளியே கைப்பற்றப்பட்ட இருள் சிகப்பு நிற மங்கி குல்லா மட்டுமே போலீசாரிடம் தடயமாக இருந்தது.

பவுலின் மேரியிடம் தையல் பயிற்சிக்கு வந்து செல்லும் பெண்களிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தனர். அப்போது ஒரு பெண், கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு கடியப்பட்டினத்தை சேர்ந்த அமலசுதன் என்பவர் தன்னை காதலிக்க சொல்லி விரட்டி வந்ததாகவும், அதனை பவுலின் மேரி தட்டிக்கேட்டு விரட்டி விட்டதாக தெரிவித்த தோடு, அப்போது தான் எடுத்த வீடியோ ஒன்றையும் போலீசாரிடம் வழங்கினார்.

வீட்டுவாசலில் இருசக்கரவாகனத்தில் நின்ற ஜெர்க்கின் அணிந்த அந்த ரோமியோவை மறித்து, கையில் இரும்பு பூட்டுடன் கெத்தாக நின்று பவுலின் மேரி எச்சரித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த வீடியோவை சற்று உற்று நோக்கிய போது கொலை நடந்த அன்று வீட்டு தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட இருள் சிகப்பு நிற மங்கி குல்லா அவனது ஜெர்க்கினில் சொறுகி வைத்திருப்பதை போலீசார் கண்டனர்.

இதையடுத்து கொலை நடந்த நாளில் இருந்து எப்போதும் போலீசாருடனேயே சுற்றிவந்த கடியப்பட்டினத்தை சேர்ந்த அமலசுதனை பிடித்து விசாரித்த போது கொலைக்கான பின்னணி அம்பலமானது.

பெண்கள் விவகாரத்தில் ரோமியோவாக வலம் வந்த அமலசுதன், தையல் பயிற்சிக்கு செல்லும் பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்த மேற்கொண்ட முயற்சிக்கு தடையாக இருந்ததோடு, தன்னை அவமானப்படுத்தி அனுப்பிய பவுலின் மேரியை கொலை செய்யும் திட்டத்துடன் கடந்த 6 ந்தேதி நள்ளிரவு மங்கி குல்லா அணிந்தபடி வீட்டுக்குச்சென்று காலிங் பெல் அடித்துள்ளான்.

அவர் திறக்காத ஆத்திரத்தில் மீட்டர் பாக்ஸை அடித்து உடைத்து மின்தடை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளான். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பவுலின் மேரி வீட்டில் விளக்கு எரிவதை கண்டு மீண்டும் ஆத்திரம் அடைந்துள்ளான்

வீடு முழுவதும் இன்வெர்ட்டர் இணைப்பு பெற்றிருந்ததால் விளக்குகள் எரிய தொடங்கி இருக்கின்றது. இந்த முறை காலிங் பெல்லை அழுத்தியதும், கதவை திறந்த பவுலின் மேரியை அடித்து தள்ளிய அமல சுதன் அங்கிருந்த அயன்பாக்ஸை எடுத்து பவுலின் மேரி தலையில் குத்தி கொலை செய்ததாகவும், சத்தம் கேட்டு வந்த திரேசம்மாளையும் கொலை செய்துவிட்டு, இது நகைக்காக நடந்த கொலை என்று வழக்கை திசை திருப்ப அவர்கள் கழுத்தில் கிடந்த இரு தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு வெளியே வந்து மங்கி குல்லாவை தூக்கி வீசிவிட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மறு நாள் காலையில் தனக்கு ஒன்றும் தெரியாதது போல கஞ்சா கும்பல் அட்டூழியம் என்று ஊராருடன் சேர்ந்து கதை அளந்து தங்களை திசைதிருப்பியதாகவும் போலீசார் கூறினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கொள்ளையடித்த இரு தங்க சங்கிலிகளையும் அமலசுதன் தனது இரு காதலிகளுக்கு அன்பு பரிசாக கொடுத்துள்ளான். அவர்கள் அடகுவைத்து பணத்தை எடுத்துக் கொண்ட நிலையில் அந்த நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.