5 கிலோ நகை கொள்ளைச் சம்பவம்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் கைது!

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியரிடம் தஞ்சாவூரில் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.14 லட்சம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை எல்லை தாண்டி சென்று கைது செய்துள்ளனர் தனிப்படை போலீஸார். ஆனால் களவுபோன நகை எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை தெற்கு வீதியை சேர்ந்தவர் மணி (56). தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்துவரும் மணி சென்னை என்.எஸ்.பி சாலையில் உள்ள நகை மொத்த வியாபாரிகள் செய்து கொடுக்கும் நகைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நகைக் கடைகளுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அவர்கள் கொடுக்கும் பழைய நகைகள் மற்றும் பணத்தை பெற்று மொத்த வியாபாரியிடம் கொடுக்குமு் வேலையை செய்து வருகிறார்.

இவர் கடந்த மே 31-ம் தேதி தஞ்சையில் உள்ள நகைக் கடைகளில் புதிய நகைகளை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அவர்கள் கொடுத்த பழைய நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தஞ்சையில் இருந்து ரயில் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்னதாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, நகை மற்றும் பணம் இருந்த பையை கீழே வைத்துவிட்டு சாப்பிட்டதற்கான பணத்தை கொடுக்க சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது பையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அப்பையில் 5  கிலோ நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் இருந்தது. இதுகுறித்த மணி தஞ்சை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக  தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்கள் குறித்து அப் பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கொள்ளையர்கள் அனைவரும் ஒரே சீருடை அணிந்து கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் தொப்புள் பிள்ளையார் கோவில் வழியாக வந்திருப்பதும், கொள்ளையடித்த பின்னர் 3 கொள்ளையர்கள் மட்டும் ஆட்டோவில் ஏறி தஞ்சை பெரிய கோவில் வரை சென்றிருப்பதும் அவர்கள் அனைவரும் வெளி மாநிலத்தவர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.  ஆனால்  அவர்கள் அனைவரும் எப்படி எங்கே தப்பிச் சென்றார்கள் என தெரியாமல் போலீஸார் திணறி வந்தனர்.

இந்நிலையில், கூடுதல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்று அங்கேயே முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நடவடிக்கையின் பலனாக, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் பகுதியில் பிடிபட்டனர்.

பிடிபட்ட கொள்ளையர்களில் ஒருவர் புனே தாலுகா வகத் பகுதியைச் சேர்ந்த தானாஜி பாபு சுக்லி (32), மற்றொருவர் கார்மலா தாலுகாவைச் சேர்ந்த பாண்டுரங் பாபு துகில் (45). இவ்விருவரும் உடனடியாக தஞ்சாவூர் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணைக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 19) இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்ன காரணத்தினாலோ இவ்விரு கொள்ளையர்கள் பிடிபட்ட தகவலை மீடியாக்களுக்கு கூட தெரிவிக்காமல் போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் 12 பேர் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட இருவரை தவிர ஏனைய மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு முயற்சி செய்து வருகின்றனர். எனினும் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரிடம் இருந்து நகை எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.