இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுங்கள் :ஏற்றுமதியாளர்களுக்கு மோடி அழைப்பு| Dinamalar

புதுடில்லி :”ஏற்றுமதியாளர்கள், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கின்றனர். நம் நாட்டை வளர்ந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு உயர்த்த இந்தத் துறையினரின் பங்களிப்பு அதிகம் தேவை,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

‘வாணிஜ்யா பவன்’

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புதிய அலுவலகமான, ‘வாணிஜ்யா பவன்’ திறப்பு விழா, புதுடில்லியில் நடந்தது. இதை திறந்து வைத்தும், ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான விபரங்களை தொகுக்கும் புதிய இணைய தளத்தை துவக்கி வைத்தும், பிரதமர்
நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச பொருளாதார சிக்கல் என பல பிரச்னைகள் இருந்தபோதும், கடந்த நிதியாண்டில் நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி, 50 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி
உள்ளது. இதையடுத்து இந்த நிதியாண்டுக்கான இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து தரப்பினரும் இரு மடங்கு உழைப்பை தர வேண்டும்.ஏற்றுமதி நிறுவனங்கள் குறுகிய கால இலக்குகளை தவிர்த்து, நீண்ட கால இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்.

புதிய பொருள்

நாட்டின் வளர்ச்சியில் ஏற்றுமதிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. வளர்ந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து, நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவது ஏற்றுமதியாளர்கள் கையில் உள்ளது.இதை உணர்ந்தே, தொழில் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதுடன், ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் பலன் நமக்கு தெரியவந்துள்ளது. பல மாநிலங்களில், சிறிய நகரங்களில் இருந்தும், புதிய புதிய பொருட்கள், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.ஏற்றுமதி தொடர்பாக, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளோம்.இதுபோல பல நாடுகளுடனும் செய்ய உள்ளோம்.
மத்திய அரசு, சுலபமாக தொழில் செய்வதற்கான வாய்ப்பு களை உருவாக்குவதுடன், வர்த்தக துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதற்காகவே, இந்த புதிய கட்டடம், புதிய இணைய தளம் உருவாக்கப்பட்டு
உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.