“பேராசை, பதவி வெறி, காட்டுமிராண்டித்தன பொதுக்குழு” – வைத்திலிங்கம் ஆவேசம்

சென்னை: “பேராசை, பதவி வெறியில் கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பட்டன; அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “சட்டத்திற்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று ஆவேசமாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.

இதன்பிறகு பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்தியலிங்கம், “உயர் நீதிமன்றம் உத்தரவின் படி 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது. இதையும் மீறி தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். தீர்மானங்களை ரத்து செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை. அவைத் தலைவர் தேர்வும் செல்லாது.

அதிமுகவின் அவைத் தலைவரை அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளராக இருந்த எம்ஜிஆர் அறிவித்தார். அதன்பிறகு ஜெயலலிதா அறிவித்தார். அதன்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அறிவிக்க வேண்டும். அதிமுகவில் இதுதான் நடைமுறை.

23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டுவிட்டது. எனவே, பொதுக் குழு உறுப்பினர்களும் ரத்து ஆகிவிட்டார்கள். அப்புறம் எப்படி அவைத் தலைவரை தேர்வு செய்ய முடியும்? பேராசை, பதவி வெறி, சட்டத்தை மறந்து நீதிமன்ற உத்தரவை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டது.

பொதுக் குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஜூலை 11-ம் பொதுக்குழு கூடாது. பொதுக்குழு கூட 100 சதவீதம் சாத்தியக் கூறு இல்லை. கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது.

கட்சி நன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், கூட்டுத் தலைமைதான் கட்சி தலைமைக்கு நல்லது என்பதுதான் ஒருங்கிணைப்பாளரின் விருப்பம். இதற்கு அவர்கள் ஒத்து வந்தால் ஒன்று சேர்ந்து கட்சியை நடத்துவோம். எதிர்காலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.