சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே அரசை உருக்குலைத்த பட்னாவிஸ்… யார் இவர்?

மகாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. இவருடைய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

இதோடு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்படி அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். சிவசேனா கட்சியில் மொத்தம் உள்ள 56 எம்.எல்.ஏ-க்களில் 30க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷாரி நேற்று உத்தரவிட்டார்.

உத்தவ் தாக்கரே

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது உருக்கமான உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தவர், “எதிர்பாராத வகையில் நான் ஆட்சிக்கு வந்தேன், அதே பாணியில் நான் வெளியே செல்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். உத்தவ் தாக்கரேயின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரே முதல்வராகத் தொடருமாறு ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது. உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பா.ஜ.க. வினர் புதிய ஆட்சி அமைக்க இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோருகிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ் விரைவில் பதவியேற்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும் 12 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடம் பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘விரைவில் அமைக்கப்பட உள்ள அரசில் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து பா.ஜ.க-வுடன் தனது அணி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதுவரை அமைச்சகங்களின் பட்டியல் பற்றிய விவாதங்களை நம்ப வேண்டாம். இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்’ என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே

அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மும்பையில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க கேட்டுக் கொண்டதையடுத்து, பட்னாவிஸ் இல்லத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் மூத்த தலைவர்கள் கிரிஷ் மகாஜன், பிரவின் தரேகர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதற்கிடையில் பா.ஜ.க மாநில தலைவர் சந்திரகாந்த் பட்டீல், ‘அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தலைமை தாங்கி ஜூன் 22 முதல் கவுகாத்தியில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ் சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த தேவேந்திர பட்னாவிஸ்?

நாக்பூர் மாவட்டத்தில் 1970-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி பிறந்தவர் பட்னாவிஸ். இவரது தந்தை கங்காதர் பட்னாவிஸ் நாக்பூரில் இருந்து மகாராஷ்டிரத்தில் மேலவை உறுப்பினராக இருந்தார். அவசரக்காலத்துக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரால் இயங்கி வந்த பள்ளியில் தேவேந்திர பட்னாவிஸ் படித்து வந்தார். இந்த நிலையில் ஜனசங்கத்தில் உறுப்பினராக இருந்த கங்காதர் பட்னாவிஸ் , அப்போதைய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். இதைத் தொடர்ந்து கங்காதர பட்னாவிஸ் கைது செய்யப்பட்ட நிலையில் இந்திரா என்ற பெயரிலான பள்ளியில் படிக்க மாட்டேன் என கூறிய தேவேந்திர பட்னாவிஸ், வேறு பள்ளியில் சேர்ந்தார். நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 1992-ஆம் ஆண்டு சட்டப் படிப்பு படித்தவர், தந்தை ஜனசங்கத்தில் பணியாற்றியது போல் 1990-களில் பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க மாணவரணி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ்

இதையடுத்து ராம்நகர் வார்ட்டில் நடந்த மாநகராட்சி தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றார். 5 ஆண்டுகளுக்கு வார்டு உறுப்பினராக இருந்த பட்னாவிஸ், நாக்பூர் மாநகராட்சியின் இளம் மேயராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் இளம் வயது மேயர்களில் இரண்டாவது மேயர் என்ற பெருமையை பெற்றார். 1999-ஆம் ஆண்டு நாக்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார். அன்று முதல் 2019-இல் நடந்த சட்டசபை தேர்தல் வரை நாக்பூர் எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத போதும், சிவசேனா ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்று தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்தார்.

பட்னாவிஸ் – உத்தவ் தாக்கரே

2019-ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களைக் கைப்பற்றிய அந்த கூட்டணி உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடன் சேர்ந்து அரசை அமைத்தது. இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2019-ஆம் ஆண்டு தனது 49 வயதில் இரண்டாவது முறையாக குறுகிய காலத்தில் முதல்வராக பட்னாவிஸ் இருந்தார். இப்போது ஏற்பட்டுள்ள ஆட்சி கவிழ்ப்பிற்குப் பின் மூன்றாவது முறையாக முதல்வர் பதவி பொறுப்பேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். இவருக்கு அம்ருதா பட்னாவிஸ் என்ற மனைவியும் திவிஜா பட்னாவிஸ் என்ற மகளும் உள்ளனர்.

மோடி அமித்ஷா

மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில், அங்கிருந்த மாநிலக் கட்சிகளுக்குள் உட்புகுந்து, அவர்களுக்குள் இருக்கும் முரண்களைக் கையாண்டு; அந்த கட்சிகளைக் காணாமல் செய்து; பாஜகவினை வளர்த்தெடுக்க அந்த தலைவர்கள், நிர்வாகிகளை எல்லாம் பா.ஜ.க-வின் தலைவர்களாக மாற்றியதோ, அதே போன்றதொரு நிலையைத்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் நிகழ்த்தி இருக்கிறது பா.ஜ.க. இது இந்தியா முழுவதும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.