Nupur Sharma: செய்தித் தொடர்பாளர்னா இப்படி இருக்கணும்.. பாஜகவிலேயே நல்லுதாரணமும் இருக்கு!

“ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா.. அதிகாரம் கையில் இருக்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச முடியுமா”… என்று பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை வெளுத்து வாங்கியிருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. இதே பாஜகவில் அருமையான செய்தித் தொடர்பாளரும் இருந்துள்ளார்.. அவரும் பெண்தான்.. அதை விட முக்கியமானது, அவர்தான் ஒரு தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளரும் கூட.. மறைந்த சுஷ்மா சுவராஜ்தான் அவர்.

செய்தித் தொடர்பாளர் என்பவர் ஒரு கட்சியின் முகமாக திகழ்பவர். அவர்தான் கட்சிக்கும், பொதுமக்களுக்கும், இடையிலான பாலம் போல. இவர் திறமையாக, சரியாக செயல்படும்போது அந்தக் கட்சிக்கும் கூடுதல் பலம் கிடைக்கிறது, மக்களிடையே நல்ல அறிமுகம் கிடைக்கிறது. மக்களிடம் நல்ல செல்வாக்கு அதிகரிக்கவும் செய்தித் தொடர்பாளர்கள் பெரும் பங்காற்ற முடியும்.

பல உதாரணங்களை இதற்கு நாம் மேற்கோள் காட்டலாம்.. பாஜகவை இப்போது சுப்ரீம் கோர்ட் கையில் எடுத்திருப்பதால், பாஜகவிலேயே இதற்கான உதாரணங்களை நாம் பார்க்கலாம்.

மறைந்த சுஷ்மா சுவராஜ்தான் ஒரு தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டவர். மிகச் சிறந்த பேச்சாளர், போர்க்குணம் மிக்கவர்.. தேவையில்லாத உளறல்கள் இவரிடமிருந்து வராது. தெளிவாகப் பேசக் கூடியவர்.. தப்புத் தப்பாக பேசி பிறகு மன்னிப்பு கேட்காதவர். புத்திசாலி, திறமையாளர்.. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அழகாக சமாளிக்கக் கூடியவர்.

செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டாலும் கூட மிக சாதுரியமாக ஒவ்வொன்றையும் எதிர்கொள்ளக் கூடியவர். எந்தக் கேள்வியையும் பதிலளிக்காமல் ஸ்கிப் பண்ண மாட்டார். ஒவ்வொன்றுக்கும் அதிரடியாக பதில் தரக் கூடியவர்.

மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசாதவர், மட்டமான பேச்சுக்களில் ஈடுபடாதவர். தரம் தாழ்ந்து விமர்சிக்காதவர். அனைத்து மதங்களையும் மதித்து நடக்கக் கூடியவர். தனது கட்சியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் அதே நேரத்தில் பிறருடைய மனங்கள் புண்படும்படி ஒரு சொல் கூட பேசாதவர்.. சமூக நல்லிணக்கத்தை மதித்து நடந்தவர்… பாஜகவிலேயே வெகு சில தலைவர்களுக்குத்தான் பிற மதத்தவர்களிடமும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அப்படிப்பட்ட அரிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ்.

செய்தித் தொடர்பாளராக இவர் திகழ்ந்த கால கட்டத்தில் பாஜகவின் மவுசு மக்களிடையே வெகு வேகமாக அதிகரித்தது. அதற்குக் காரணம், இவரது திறமையான் அணுகுமுறைதான். வட இந்தியா மட்டுமல்லாமல் தென்னகத்திலும் கூட சுஷ்மாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உண்டு. காரணம், இவரது எளிமை, இயல்பான பேச்சு, தேவையில்லாமல் வார்த்தைகளை விடுவதில்லை என்ற நல்ல இமேஜ் உள்ளிட்டவைதான்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட பாஜகவின் இமேஜ் உயரவும், செல்வாக்கு அதிகரிக்கவும், நல்ல பெயர் கிடைக்கவும் சுஷ்மா சுவராஜும் ஒரு முக்கியப் பங்காற்றினார் என்பதை யாருமே மறுக்க முடியாது. இன்று நுபுர் சர்மாவால் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு அவப் பெயரே கிடைத்துள்ளது.

இதேபோல இன்னொரு பெண் தலைவரும் பாஜகவுக்கு இருந்தார். அவர்தான் தமிழிசை செளந்தரராஜன். வடக்கில் சுஷ்மா என்றால், தெற்கில் தமிழிசைதான் மிகச் சிறந்த பாஜக பெண் பேச்சாளர் ஆவார். இவர் பாஜக தலைவராவதற்கு முன்பே செய்தியாளர்கள் சந்திப்பில் அசத்துவார்.. செய்தியாளர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளையும் தைரியமாக எதிர்கொண்டு சமாளிப்பார். சரியான பதிலடி கொடுப்பார்.. கோபமாகவே பேசினாலும் அதில் ஒரு குணத்தை வெளிப்படுத்துவார், வார்த்தைகள் தவறாகவும் போகாது, தேவையில்லாத விமர்சனங்களும் இருக்காது.

தமிழக பாஜக தலைவரான பிறகும் கூட அதிகார மமதை அவரது தலையில் ஏறவில்லை. மாறாக இன்னும் முதிர்ச்சியானவராக மாறி நின்றார். முரட்டுத்தனமான கேள்விகளையும் கூட மிரட்டலாக பதிலளித்து வியக்க வைப்பார். இன்று அவரை அத்தனை பேரும் மிஸ் செய்கிறார்கள்.. அவரது பேச்சை மிஸ் செய்கிறார்கள்.. அதை பலரும் அவரது டிவிட்டர் பக்கத்திலேயே போய் சொல்கிறார்கள்.. “அக்கா மறுபடியும் கட்சிக்கு வாங்க. உங்களை மிஸ் செய்கிறோம்.. உங்களது பேச்சை மிஸ் செய்கிறோம்” என்று சொல்லாத நாளே இல்லை.

இப்படியும் பெண் தலைவர்கள் பாஜகவில் இருந்தனர்.. இப்போது நுபுர் சர்மா போன்றோர்தான் உள்ளனர். ஒரு கட்சிக்கு மக்களிடம் நல்ல பெயரை உருவாக்குவதில் செய்தித் தொடர்பாளர்களின் பங்கு முக்கியமானது. அதை உணர்ந்து அவர்கள் செயல்படும்போது நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்.. இமேஜ் வலுவாகும்.. அதில் தவறு நடந்தால் சுப்ரீம் கோர்ட்டில் போய்த்தான் நிற்க வேண்டும்.. இப்படித்தான் வசவும் கிடைக்கும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.