`தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்’ – நயினார் நாகேந்திரன் அதிரடி

தேர்தலின் போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார் அவர் பேசும்போது, “தமிழகத்தில் மது போதைக்கு அடிமையாகக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. வருங்காலத்தை நினைத்தால் இன்னும் அச்சம் அதிகமாகிறது.

தமிழகத்தில் மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகரிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட கஞ்சாவுக்கு அடிமையாகும் கொடுமை நடக்கிறது. அதனால் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

நயினார் நாகேந்திரன்

கஞ்சா போதை காரணமாக ஒரே மாதத்தில் ஏழு பேர் கொலையாகி இருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் கமிஷன் பற்றியே முதல்வர் சிந்திக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் காண்டிராக்டர்களிடம் இருந்து மட்டும் 40,000 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றிருக்கிறார்கள்.

அ தி.மு.க-வின் முன்னாள் சபாநாயகராக இருந்த மறைந்த காளிமுத்து பேசும்போது, ’எப்போதும் ஆட்சிக்கு வரும் கட்சி அ.தி.மு.க. ஆனால் எப்போதாவது ஆட்சிக்கு வரும் கட்சி தான் தி.மு.க’ என்பார். பல்வேறு காரணங்களால் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட்டது. கூட்டணி தர்மம் கருதி அதை நான் வெளியில் சொல்ல முடியாது. ஆனாலும், இரண்டு, மூன்று காரியங்களை எடப்பாடி பழனிசாமி சரிசெய்திருந்தால் இன்றைக்கு அவர் முதல்வராக இருந்திருப்பார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ’தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். அவர் ஆசைப்படும்போது நாங்கள் கேட்கக்கூடாதா? அதனால் நாங்களும் தமிழ்நாட்டை ஆந்திரா போன்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்போம். தலா 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டால் இரண்டிலும் பாரதிய ஜனதா முதலமைச்சராக வர முடியும்.

நிர்வாக வசதிக்காக பாண்டிய நாடு, பல்லவ நாடு எனப் பிரிக்கலாம். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

அதனால் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முடியும். தெலங்கானா பிரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆந்திராவில் நடைபெற்ற போராட்டம் போல, தமிழ்நாட்டையும் இரண்டாகப் பிரிக்கக் கோரி போராட்டம் நடைபெறலாம்” என்று நயினார் நாகேந்திரன் பேசினார். பின்னர், தி.மு.க அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.