‘நான் ஒருதடவை சொன்னா', ‘முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு’ -வசன மேஜிக் பாலகுமாரனின் பிறந்தநாள்!

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிப்படமாக அமைவதற்கு, அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, எழுத்து, வசனம், இயக்கம், பின்னணி இசை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் பங்களிப்புமுமே மிக முக்கியம். அப்போது தான் பார்வையாளர்களுக்கு முழுமையான விருந்தாக அமையும். ஆனால் சாதரண பார்வையாளன் தன்னால் முடியாத அல்லது தான் நினைக்கின்ற விஷயங்களை ஒரு படத்தில் கதாநாயகன் செய்யும்போது, அங்கு அவனுடைய பாராட்டை வெளிப்படுத்தும் வகையில் திரையரங்குகளில் விசில் பறக்கும்.

சொல்லப்போனால், கதாநாயகனோ அல்லது கதாபாத்திரமோ அங்கு, ஜீவன் கொடுத்து அதாவது ஆத்மாவாக உயிர்பிப்பது ஒரு வசனகர்த்தா தான் என்பதை நாம் எப்போதும் மறுக்க முடியாது. ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் ஸ்டைல் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது என்றால், மற்றொருபுறம் அவர் பேசும் வசனங்கள் இன்றளவும் நமக்கு அந்தப் படத்தை பார்க்காமலே தானாக, நாம் பேசும் வார்த்தைகளில் வந்து விழும். ‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி’, ‘நீங்க யாரு.. சொல்லுங்க… சொல்லுங்க..’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ ஏன், ரஜினி ‘ஹே.. ஹே….’ என்று எக்ஸ்பிரஷனோடு அவர் கூறும் அந்த வார்த்தைகளும் அந்தக் காட்சிகளும் கூட நமது மனதை விட்டு எப்போதும் நீங்காது.

image

இதேபோல், ‘நாயகன்’ படத்தில் வேலுநாயக்கராக கமல் வாழ்ந்தாலும், ‘நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்’, ‘முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு’, ‘நாலு காசு சம்பாதிக்கணும்னா சாவனும்’, நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல’ இப்படி வசனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வசனங்களை எல்லாம் இப்போது ஏன் நாம் குறிப்பிடுகிறோம் என்றால், காலத்தால் நிற்கும் இந்த வசனங்களை எழுதியது மறைந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன். படைப்பாளிகள் மறைந்தாலும் அவரது படைப்புகள் மறைவதில்லை என்று சொல்வதுண்டு. ஆம், பாலகுமாரனின் நாவல்கள், சிறுகதைகள் மட்டும் காலத்தால் அழியாத பொக்கிஷம் இல்லை. அவரது வசனங்களும் தான்.

image

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமர்நேரி தான் பாலகுமாரனின் சொந்த ஊர். 1946-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பிறந்தார். சிறுவயது முதலே தமிழ், சங்கக்கால இலக்கியம் மீது கொண்ட ஆர்வம், அவரது இலக்கியங்கள் மற்றும் வசனங்களின் ஊடே நாம் அறியமுடியும். தமிழ் இலக்கியம் மீது கொண்ட தாகத்தால் கவிஞராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னால் நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதையாசிரியராக, இயக்குராக அறியப்பட்டார். கல்கியின் பொன்னியின் செல்வன் கதையால் ஈர்க்கப்பட்ட பாலகுமாரன், தனது நேர்காணல் ஒன்றிலும் அதுகுறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

image

‘மெர்குரி பூக்கள்’, ‘உடையார்’, ‘இரும்புக் குதிரைகள்’ என எண்ணற்ற எழுத்து படைப்புகளை அடுத்த தலைமுறைக்கும் பாலகுமாரன் கொடுத்து சென்றுள்ளார் என்றே கூறலாம். இதில் சோழர்களை பற்றி தேடித் தேடி ‘உடையார்’ நாவலில் எழுதியிருப்பார். ‘நாயகன்’, ‘குணா’, ‘பாட்ஷா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘சிட்டிசன்’, ‘உல்லாசம்’, ‘ஜீன்ஸ்’, ‘காதல் சடுகுடு’, ‘ஜனனம்’, ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பலப் படங்களுக்கு பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார். கமல், ரஜினி தலைமுறைக்கு மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த சிம்புவின் ‘மன்மதன்’, ‘வல்லவன்’ படங்களிலும், குறிப்பாக ‘புதுப்பேட்டை’ படத்தில் ‘யாராவது இருக்கீங்களா, பயமா இருக்கு’ என்று தனுஷ் கூறும் வசனங்கள் எல்லாம் ஒருவரின் பயத்தை அப்படியே வெளிக்காட்டும்.

image

வசனம், திரைக்கதை மட்டுமின்றி, கமலின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த நிலையில், பாக்யராஜ், ஷோபானா நடிப்பில் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த ‘இது நம்ம ஆளு’ படத்தையும் பாலகுமாரன் இயக்கியுள்ளார்.  ‘காதலன்’ பட வசனத்துக்காக தமிழ்நாடு மாநில விருதையும் அவர் பெற்றுள்ளார். இவரது நாவல்களின் சில பெயர்களும், படத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. ‘மெர்க்குரி பூக்கள்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘பயணிகள் கவனிக்கவும்’ , இரும்பு குதிரை’ படப் பெயர்கள் இவரது நாவல்களின் தலைப்புகள் தான். பல்வேறு இதழ்களிலும் பாலகுமாரன் பணியாற்றியுள்ளார்.

image

எனினும் அவரை மிகவும் அனைத்து தரப்பு மக்களிடமும் பரிச்சயமாக்கியது என்றால், சாதாரண மனிதனின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வசனங்களை அவர் உருவாக்கியதுதான். லெஜண்ட்கள் தானாகவே உருவாகிறார்கள் என்பதற்கு பாலகுமாரனும் ஒரு உதாரணம். கடந்த 2018-ம் ஆண்டு தனது 71-வது வயதில் இறப்பதற்கு முன்பாக பலராலும் ஞானியாகவே அவர் அறியப்பட்டார். அதற்கு அவரது வெண்மை நிற நீளமான தாடி மட்டும் காரணமில்லை. எழுத்து சித்தர் என்று போற்றப்படுகிற அளவில் இருந்த அவரது எழுத்துக்களும் தான். கலைமாமணி விருதுபெற்றுள்ள இந்தக் கலைஞனை சற்று இன்னும் கொண்டாடி இருக்கலாமோ என்றுதான் நமக்கு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.