ஆ.ராசா பேசியது ஸ்டாலின் கருத்தா? தமிழக அரசு கருத்தா? பொன்னார் கேள்வி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே  நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர்,

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் மிகுந்த ஆட்சியை போதைக்கு துணை போகும் ஆட்சியை, தமிழை அழிக்கின்ற ஆட்சியை கண்டித்து பா.ஜ. கட்சி சார்பில் உண்ணவிரதம் நடைபெற்றது. பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தாய்மொழி கல்வியில் தோல்வியடையும் அளவிற்கு கல்வித் தரம் உள்ளது. தமிழை அந்த அளவுக்கு அழித்துள்ளனர். ஊழல் தலை விரித்து ஆடுகிறது.

முதல்வர் இருக்கும் மேடையிலேயே கொள்கை பரப்பு செயலாளர் பிரிவினைவாதம் குறித்து பேசும் அளவிற்கு முன் வந்துள்ளனர். 1960களில் நடந்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டி பேசுவது, மீண்டும் 60 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலைக்கு போவது போல் உள்ளது. அது திமுகவின் கருத்தா? அல்லது திமுக ஆட்சியின் கருத்தா? இல்லை தமிழக முதல்வரின் கருத்தா என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதற்கு விளக்கம் சொல்ல தவறினால், பிரிவினைவாதத்தை நோக்கி அவர் அடி எடுத்து வைப்பதாகத்தான் அர்த்தம். அவ்வாறு தமிழகத்தை பிரிப்பதாக அவர்கள் நினைத்தால் எக்காரணத்தைக் கொண்டும் அதற்கு அனுமதிக்க மாட்டோம். பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று சொல்வது உங்களுக்கு பெருமை. அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள் கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றவர்கள் வாழ்ந்த இந்த பூமி தேச பக்தர்களின் வழி தோன்றல்கள் என்று நாங்கள் சொல்லிக் கொள்வோம்.

அதையும் மீறி நீங்கள் சவால் விடுத்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். அந்த தலைவர்களின் வழியில் போராடி வென்றே தீருவோம். பிரிவினைவாதம் பேசுவதை திமுகவுக்கு ஓட்டளித்தவர்கள் உட்பட எட்டு கோடி தமிழர்கள் உங்களை பார்த்துக் கொண்டுள்ளனர். நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்டும் திமுகவினர் திராவிட நாடு என்ற கொள்கையை நோக்கித்தான் செயல்படுகிறோம் என்று கூறியிருந்தால் ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது அன்று தமிழகத்தை சுடுகாடாக மாற்ற நினைத்தவர்கள் ஏறக்குறைய அதை செய்து விட்டார்கள்.

விவசாயம் உட்பட அனைத்து தொழில்களிலும் தமிழகத்துக்குள் வெளிமாநிலத்தவர் வந்துள்ளனர். இவ்வளவு காலம் அதை செய்த தமிழர்கள் எங்கே போனார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. அவர்களை எல்லாம் போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். போதைப் பொருட்கள் அனைத்துமே சர்வ சாதாரணமாக மாணவர்களுக்கு கூட கிடைக்கிறது.

திமுக ஆட்சிக்காலம் துவங்கியதில் இருந்து இதை கண்டிக்கிறோம். தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால் ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி அசைக்க நினைத்தால் அசிங்கப்பட்டு போவீர்கள், அழிந்துபோவீர்கள் என்று பேசியுள்ளார்.

க. சண்முகவடிவேல் 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.