அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் ?, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது.அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இதேபோல், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவை சட்டப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருக்கிற நிலையில், உயர் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தனிநீதிபதியை அணுகலாம் என்று உத்தரவிட்டுள்ளது அதன் அடிப்படையில், நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வாதிட்டார்.

அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று, ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வந்துள்ளது. மனுதாரர் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தக்கூடாது என்று வழக்கு தாக்கல் செய்த நாள் வரை பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு 13 நாட்கள் முடிவடைந்துள்ளது. எனவே, கூட்டம் தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என கருதக்கூடாது. மேலும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது.

இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ஏற்கெனவே தள்ளுபடி செய்த மனுவில் கேட்டிருந்த கோரிக்கைகளை மீண்டும் கோர முடியாது. மனுதாரர்கள் பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்து வேண்டுமானால் வழக்கு தொடரலாம் என்று வாதிட்டார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காகத்தான் இந்த பொதுக்குழு கூட்டப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருப்பதாக கூறப்படவில்லை. இந்த நிலையில் பொதுக்குழுவை கூட்டியிருப்பது தவறு. கட்சியின் விதிகளுக்குட்பட்டு உறுப்பினர்களால் முறையாக தேர்வு செய்யப்பட்ட பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகளாக இருக்கும் நிலையில் கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஒரம்கட்ட முடியாது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்?, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.