காலரா பரவலை புதுவை அரசு துரிதமாகக் கட்டுப்படுத்தியது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

காரைக்கால்: புதுச்சேரி அரசின் துரிதமான நடவடிக்கையால் காரைக்காலில் காலரா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஜூலை 7) காரைக்கால் வந்தார். மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”காரைக்காலில் கடந்த ஒன்றரை மாதங்களாக பலர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அரசின் துரிதமான நடவடிக்கையால் காலரா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் 24 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரத் துறையினர் நேரடியாக சென்று தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று மருத்துவ உதவி வழங்கல், தூய்மைப் பணி என செய்து வருகின்றனர். வயிற்றுப்போக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட வேண்டியவை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது மாநில அரசுகளின் வரம்புக்குள் வரக்கூடியதாக இருக்கிறது. அந்தந்த மாநிலங்களே இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இப்பிரச்சினை தொடர்பான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி, மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.