குறுங்காடு, குளம் சீரமைப்பு.. ஊரை மாற்றிய இளைஞர்களின் சாதனை கதை!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது வி.எம்.சத்திரம் என்ற ஊர். கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது புறநகர் பகுதியில் இது அமைந்துள்ளது. அந்த ஊரின் மூர்த்தி நயினார்  கரைகளை சீர்படுத்தும் வேலையில், ஹிட்டாச்சி இயந்திரம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அக்குளத்தில் வடமேற்குக் கரையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், மரக்கூட்டங்களுக்கிடையே மிகவும் சுறுசுறுப்பாக தங்கள் பணியை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரான செந்தில் அவர்களை சந்தித்து பேச துவங்கினோம்.

அங்கே உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே அவர் நம்மிடம் பேச துவங்கினார். அருகே நான்கைந்து சிறுவர்கள் மரக்கன்று வளர்ப்பதற்காக மண்கலவை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

கொரோனாவால் நிகழ்ந்த மாற்றம்

எங்களுக்கு இந்த ஊர் தான். ஆனால் வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். கொரொனோ ஊரடங்கு எல்லாருடைய வாழ்கையையும் மாற்றியது போல, எங்களையும் எங்களது ஊரையும் மாற்றியது. கொரோனோவுக்கு முன்பு சிறுசிறு சுற்றுச்சுழல் மற்றும் சமூகப்பணிகளை ஆற்றிய நாங்கள் கொரோனோவுக்கு பின்பு எங்களது ஊரை வேறு பார்வையில் பார்க்க ஆரம்பித்தோம்.

எங்களது ஊரில் உள்ள நன்கு படித்த, நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து சமூக பணி ஆற்ற வேண்டும் என்று பல நாட்கள் விவாதித்தோம். அந்த விவாத்தில் பிறந்தது தான் ”வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பு”. எங்கள் ஊரான வி.எம்.சத்திரத்திற்கான ஒரு அமைப்பாக இந்த வி.எம்.சத்திரம் டேவலப்மெண்ட் ட்ரஸ்ட்-ஐ உருவாக்கினோம். இதனை முறையாக 07/07/2021 அன்று பதிவு செய்தோம்.

அப்போதைய மாநகராட்சி ஆணையர் விஷ்னு சந்திரனுடன் வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பினர்

பின்னர் எங்களது ஊரை உற்றுநோக்க ஆரம்பித்தோம். ஊரில் உள்ள சுற்றுச்சுழல் மற்றும் சமூகப் பொருளாதார காரணிகளையும், பிரச்சனைகளையும் ஆய்வு செய்தோம். இதனடிப்படையில் அமைப்பின் நோக்கங்களை உருவாக்கி, அதனை ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்துவது என்று முடிவு செய்தோம்.

15 நோக்கங்களை அடிப்படையாக வைத்து அதில் முதல் நோக்கமான சுற்றுச்சுழல் பாதுகாப்பை கையில் எடுத்தோம்.

பெரும் பிரச்சனையாக உருவெடுத்த கழிவுகள்

நீர் ஆதாரமாகவும், பல்லுயிர் பெருக்க சுழலுக்கு அடிப்படையாகவும் இருந்த குளங்களை மறுசீரமைப்பதை முக்கிய நோக்கமாக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். வி.எம்.சத்திரம் வருவாய் கிராமத்தில் மொத்தம் ஏழு குளங்கள் இருக்கிறது. இதில் அதிக பாதிப்புக்குள்ளான மற்றும் ஊரின் மையப்பகுதியில் உள்ள மூர்த்தி நயினார் குளத்தை சீரமைப்பது என முடிவு செய்து களமிறங்கினோம்.

அப்பொழுது கழிவுநீர் மற்றும் குப்பை ஆகியவற்றை கொட்டும் இடமாக குளம் இருந்தது. இதனை மாற்ற முடிவு செய்தோம். எனவே முதலில் திடக்கழிவுகளை குளத்தில் கொட்டாமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகளிடம் கலந்துரையாடினோம்.

ஆனாலும் குப்பை பிரச்சனை பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்து நின்றது. குளத்தில் குப்பை கொட்டும் போக்கு, குறைந்திருந்தாலும் தொடரவே செய்தது. இதுகுறித்து அப்போதைய மாநகராட்சி ஆணையர் திரு. விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் விவாதித்தோம். அவரும் பைப் கம்போஸ்டிங் திட்டத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வீட்டிலுள்ள மக்கும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பைப் கம்போஸ்டிங் திட்டம்

அப்போதைய மாநகராட்சி ஆணையர் திரு. விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் முன்னெடுப்பில், பைப் கம்போஸ்டிங்க் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை மாநகராட்சி ஊழியர்களிடம் இணைந்து, வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பினரும் மேற்கொண்டோம்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக வி.எம்.சத்திரம் (வார்டு-18)-ல் PVC குழாய் மூலமாக – மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி முன்னெடுப்பில் வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இங்குள்ள 500 வீடுகளுக்கு  இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் உருவாகும் குப்பைகளை அவரவர் வீட்டிலேயே தரம் பிரித்து அதில் உள்ள மக்கும் குப்பைகளை பயனுள்ள வகையில் உரமாக்குவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதன் பிறகு அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டு என்று முடிவு செய்தோம். அதற்காக குறுங்காடு வளர்ப்பு திட்டம், தாய்மடி திட்டம், மரம் வங்கி திட்டம் மற்றும் வீதிதோறும் மரக்கன்று வளர்க்கும் திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தினோம்.

பல்லுயிர் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க அதிகளவில் மரங்களையும், குறுங்காடுகளையும் நமது பகுதியில் வளர்க்க வேண்டும். எனவே நாமே மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக தாய்மடி திட்டத்தையும், மரக்கன்றுகளை ஊரில் உள்ள ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள மரம் வங்கி திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. தாய்மடி திட்டம் , மரம் வங்கி திட்டத்தின் கீழ் 539 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுள்ளது.

வீதிதோறும் மரக்கன்று வளர்க்கும் திட்டம்

வி.எம்.சத்திரத்திலுள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களை மரக்கன்றுகளை நட்டு முறையாக கூண்டு அமைத்து மக்களின் உதவியுடன் முறையாக பராமரிப்பது ஆகும். வீதிதோறும் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தின் கீழ் 20-க்கு மேற்பட்ட தெருக்களில் 221 நாட்டு மரக்கன்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

குறுங்காடு வளர்ப்பு திட்டம்

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை துவங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐ.ஏ.எஸ்

மூர்த்தி நயினார் குளத்தின் வடமேற்கு கரையில் சுமார் 5040 அடி கொண்ட இடத்தில் 5 அடிக்கு ஒரு மரம் வீதம் 151 மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது. மாநகரில் பசுமையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் 120 வகையில் மொத்தம் 151 மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்தக் குறுங்காட்டினை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் (நெல்லை நீர்வளம்), திருநெல்வேலி மாநகராட்சியின் அனுமதியோடு வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி, தினந்தோறும் பராமரித்து வருகின்றது. குறுங்காடு வளர்ப்புத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், தனி வட்டாட்சியர் செல்வன் மற்றும்  சமூக ஆர்வலர் கே.ஆர்.ராஜு ஆகியோர் 11/09/21 அன்று துவங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குளங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு

வி.எம்.சத்திரத்தில் மொத்தம் ஏழுகுளங்கள் உள்ளது. நாகு ரெட்டியார் குளம், நொச்சிக்குளம், மூர்த்தி நயினார் குளம் , பீர்க்கன் குளம், ஆலங்குளம், புளியங்குளம் மற்றும் பிராயன் குளம் ஆகியவற்றை தூர்வாரி அப்பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதும், இந்த குளங்களை பல்லுயிர் வாழும் மண்டலமாக உருவாக்குவது அமைப்பின் முக்கிய நோக்கம். நெல்லை நீர்வளம் முன்னெடுப்பில் நெல்லை மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐ.ஏ.எஸ், வட்டாட்சியர் செல்வன் ஆகியோரின் பெரும் முயற்சியிலும் இந்தியாவிற்கான சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பு (Environments Foundation of India)-ன் பங்களிப்பிலும்  வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பின் கோரிக்கையினால் வி.எம்.சத்திரத்தில் உள்ள குளங்களை மறு சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

ஞாயிறுதோறும் களப்பணி

அமைப்பை சார்ந்த உறுப்பினர்கள் ஞாயிற்று கிழமைதோறும் தங்களது நேரங்களை ஊர் மேம்பாட்டு பணிகளுக்காக ஓதுக்கி செயல்பட்டு வருகின்றனர். அனைத்து ஞாயிற்றுகிழமைகளும் ஊரில் மக்களுக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள் ஒழிப்பு, மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டபட்ட குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அரசு திட்டங்கள், குப்பைகளை முறையாக பிரித்தல், கொரோனா தடுப்பூசி முகாம், நீர்நிலைகளின் முக்கியத்துவம், அரசுப்பள்ளிகள் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

பனை வளர்ப்பு திட்டம்

பல்வேறு பயனை அளிக்கக்கூடிய பனை மரங்களை வளர்க்கும் நோக்குடன் 2021-ம் ஆண்டில் 4,000-க்கு மேற்பட்ட பனை விதைகளை அரசு அலுவலகங்கள் மற்றும் நீர்நிலைகளில் நடப்பட்டுள்ளது. தூய சவேரியார் கல்லூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், என்.ஜி.ஓ காலனி பெரியகுளம் மற்றும் வி.எம்.சத்திரத்திலுள்ள ஏழு குளங்களில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வி.எம்.சத்திரம் மூர்த்தி நயினார்குளம், வடக்கு கரையில் பனங்காட்டை உருவாக்கும் பொருட்டு 174 பனை விதை நடவு செய்யபட்டது.

சிறுவர்களுக்கான சுற்றுச்சுழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

எங்கள் ஊரின் சிறுவர்களே அமைப்பின் தூண்களாக செயல்பட்டு வருகின்றனர். தங்களது விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் கழித்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மண் கலவை தயார் செய்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், விதை சேகரித்தல், மரக்கன்று நடுதல் ஆகிய சுற்றுச்சுழல் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் கலந்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக சிறுவர்கள் சுபாஷ், ஸ்ரீராம், ஹரிஹரன், ஹரிசுதன் ஆகியோர் சிறந்த முறையில் பங்களித்து வருகின்றனர்.

பள்ளி அரையாண்டு விடுமுறையில் சிறுவர்கள் பயனுள்ள நேரங்களை இயற்கையோடு செலவழிக்க சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பயிற்சி முகாமை நெல்லை நீர்வளம் மற்றும் வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு இணைந்து நடத்தியது. இந்த பயிற்சியில் மரம் செடி கொடி வகைகள் கண்டறிதல், விதை சேகரிப்பு ,மரக்கன்று சேகரிப்பு, மண் கலவை தயார் செய்தல்,  மரக்கன்று உற்பத்தி செய்தல், மரக்கன்று நடுதலுக்கான பயிற்சி, மரக்கன்றுகளை பராமரித்தல், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் உருவாக்குதல் மற்றும் அதனை பராமரித்தல் பற்றிய பயிற்சி, சுற்றுச்சூழல் சார்ந்த கதைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் புவி வெப்பமயமாதல், குப்பைகளை முறையாக பிரிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி, குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், இயற்கையோடு இணைந்த விளையாட்டுக்கள் விளையாடுதல், நீர்நிலைகள் பாதுகாப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 41 சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நெல்லை நீர்வளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை முறைப்படி பராமரித்து பாதுகாக்கும் “நெல்லை நீர்வளம்” என்ற திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பின் கீழ் வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தங்களை முழுவதுமாக தன்னார்வலராக இணைந்து அதன் நோக்கங்களை செயல்படுத்த முனைந்து வருகின்றனர்.

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு

வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பானது இன்று (ஜூலை: 7), இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வேளையில் ஊரை மேம்படுத்த பல்வேறு வகைகளில் பங்களித்து வரும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐ.ஏ.எஸ். முன்னாள் மாநகராட்சி ஆணையர் திரு. விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ், வட்டாட்சியர் திரு.செல்வன், வட்டாட்சியர் ஆவுடையப்பன், ஏனைய மாவட்ட மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள், நெல்லை நீர் வளம் அமைப்பு, நன்கொடையாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஊர் மேம்பாட்டில் நாங்கள் பயணித்த தூரம் மிகக் குறைவே, பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் என்று உணர்வுபூர்வமாக கூறி முடித்தார் செந்தில்.

முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள்,
உங்களை பார்த்து நகைப்பார்கள்,
உங்களோடு சண்டையிடுவார்கள்,
பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் –மகாத்மா காந்தி!

சமீபத்தில் சென்னையில் பிரபல பைக் ஓட்டும் யூடியூபர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தன்னுடைய ரசிகர்களை சந்திக்க, மீட்-அப் ஏற்பாடு செய்திருந்தார். அந்த இளைஞரை காண ஆயிரகணக்கான இளைஞர் பட்டாளம் அந்த இடத்தில் குவிந்தது. யார் இந்த இளைஞர்? எதற்கு இவருக்காக இவ்வளவு ஆரவாரம் என சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் கிளம்பியது.

மேலும் 2கே கிட்ஸ் என தங்களை பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளும் இளைஞர்களின் வாழ்வியல், அவர்களது எதிர்காலம் குறித்த பல விவாதங்கள் இணையத்தில் பேசு பொருளானது.

இப்படி மாய உலகத்துக்கு பின்னால், எந்த உத்தரவாதமும் இன்றி, ஓடும் இளைஞர் கூட்டத்துக்கு மத்தியில், தங்கள் ஊரை முன்னேற்ற ஓயாது உழைக்கும், சிறுவர்களையும் தங்களுடன் இணைத்து அவர்களை சீர்படுத்தி எதிர்காலமும், இயற்கையும் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் இந்த இளைஞர்கள் உண்மையில் பெருமைக்குரியவர்கள். இவர்களை போல ஊருக்கு 4 இளைஞர்கள் இருந்தால் போதும், கண்டிப்பாக அந்த ஊர் சரித்திரத்தில் ஒருநாள் இடம்பிடிக்கும்.

உதவி: சுரேஷ் மந்திரம், உதவிப் பேராசிரியர், காட்சி தொடர்பியல் துறை, காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.