`வருந்துகிறோம்’- மாட்டுக்கறி பதிவும் சென்னை காவல்துறையின் சர்ச்சை பதிலும்!

ட்விட்டர் பயனாளியொருவர் மாட்டுக்கறி புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு, `இது தேவையற்றது’ என்று சென்னை காவல்துறை கூறியது விமர்சனத்துக்குள்ளானது. சர்ச்சையை தொடர்ந்து, தங்கள் ரிப்ளைக்கு விளக்கமளித்துள்ளது சென்னை காவல்துறை.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர் நேற்றைய தினம் `மாட்டு கறி’ என கேப்ஷன் போட்டு மாட்டுக்கறி உணவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பெருநகர சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து `இத்தகைய பதிவு, இங்கு தேவையற்றது’ என பதில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் இந்த பதில், நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
image
இந்தப் பதிவை குறிப்பிட்டு, `மாட்டுக் கறி உண்ணுவது குற்றமா?’ என பலரும் தங்கள் கண்டனத்தை காவல்துறையின் பதிலின் கீழேயே பதிவு செய்தனர். இந்நிலையில் திமுக-வின் தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் “யார் இந்த ஐடி-ஐ ஹேண்டில்செய்வது? அந்த பதிவில் என்ன தப்பு? என பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை சொல்கிறது? கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கடுமையாக சாடியிருந்தார்.
image
இந்நிலையில் இது தவறுதலாக நடந்தது எனவும், இது தொடர்பாக சென்னை காவல் துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் தற்போது சென்னை காவல்துறையின் பதில் பதிவு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தற்போது காவல்துறை தரப்பு இதற்கான விளக்கத்தை பதிவிட்டுள்ளது. அதில், “அபுபக்கர், தாங்கள் பதிவிட்டTweet சென்னை காவல் துறையின் சென்னை காவல்துறை பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், `பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற காரணத்திற்காக அந்த பதில் பதிவு செய்யப்பட்டது.
image
ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே அது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.