தெலங்கானாவில் பலத்த மழை: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. பல அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் கடந்த திங்கட்கிழமை 11-ம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் 14, 15, 16 ஆகிய தேதிகள் வரை மேலும் 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் திங்கட்கிழமை 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என கல்வித் துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி நேற்று அறிவித்துள்ளார்.

இதனிடையே தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கோதாவரி நதியில் இருந்து நீர் அதிகமாக வெளியேறுவதால், மகாராஷ்டிர மாநிலத்தில் கோதாவரி நதியின் நிலவரம் குறித்து கண்காணிக்கும்படி உத்தரவிட்டார். மேலும், கோதாவரி நதி மீது கட்டப்பட்டுள்ள கடம் அணைக்கட்டு நிரம்பியதால் நேற்று 12 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள 12 கிராம மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்திலும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் லேசான மற்றும் சற்று அதிகமான மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக விசாகப்பட்டினம், காகுளம், விஜயநகரம், கோதாவரி மாவட்டங்கள் மற்றும் ராயலசீமாவில் கர்னூல், அனந்தபூர், திருப்பதி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.